இரட்டை ரயில் பாதை பணி.. குமரி செல்லும் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக குமரி மாவட்டம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பணிமனை மற்றும் வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்பட்டு மாற்று நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. எனவே பயணிகள் தங்களது பயண விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை - நாகர்கோவில் ரயில்கள்
நெல்லை பணிமனை மற்றும் வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வருகிற 20-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) மற்றும் நாகர்கோவிலில் இருந்து வருகிற 30-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
ராமேசுவரம் - கன்னியாகுமரி ரயில்கள் ரத்து
ராமேசுவரத்தில் இருந்து வருகிற 27 மற்றும் 29-ந்தேதிகளில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22621) மற்றும் மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து வருகிற 28 மற்றும் 30-ந்தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22622) ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன.
நாகர்கோவிலில் இருந்து வருகிற 14 மற்றும் 21-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321), நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்
நாகர்கோவிலில் இருந்து வருகிற 21 முதல் 23 மற்றும் 25 முதல் 30 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20692), நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
அதேபோல், நாகர்கோவிலில் இருந்து வருகிற 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22667), நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 2.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.
புதுச்சேரி - தாம்பரம் ரயில்கள்
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 29-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16862), கன்னியாகுமரி - மானாமதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும்.
மேலும், கன்னியாகுமரியில் இருந்து வருகிற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22658), கன்னியாகுமரி - விருதுநகர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விருதுநகரில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
தாம்பரத்தில் இருந்து வருகிற 20 முதல் 22 மற்றும் 24 முதல் 29 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20691), திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications