நாகை வன்னியர் சங்க நிர்வாகி மூர்த்தி கொலை வழக்கு – 2 பேர் கைது
நாகர்கோவில்: வன்னியர் சங்க நிர்வாகி மூர்த்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. வன்னியர் சங்க மாநில துணை தலைவராக இருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவரது கார் மீது வெடிகுண்டு வீசி மூர்த்தியை கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இவ்வழக்கில் 11 பேரை செம்மனார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், குமரி மாவட்ட தனிப்படை போலீசார் ஒரு வழக்கில் குற்றவாளிகளை தேடிச் சென்ற போது, நாகர்கோவிலை அடுத்த தெங்கம்புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருவர் ஒரு வீட்டில் தங்கியிருப்பதை பார்த்தனர். உடனே இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாகை மாவட்டம் சீர்காழி திருவெண்காடு மேட்டிருப்பு தெருவை சேர்ந்த கார்த்திகேயன், செழியன் என்பது தெரிய வந்தது.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் வன்னியர் சங்க நிர்வாகி மூர்த்தி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருபவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் தேடுவதை அறிந்த இருவரும் 4 மாதங்களுக்கு முன்பே நாகர்கோவிலுக்கு தப்பி வந்துள்ளனர். இங்கு ஒரு நண்பர் மூலம் தெங்கம் புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
ஏற்கனவே இருதய நோயால் அவதிப்பட்டு வந்த கார்த்திகேயனுக்கு இங்கு உடல்நிலை பாதிக்கவே, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் போலீசில் இருவரும் சிக்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட போலீசார் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாகர்கோவில் வந்த நாகை தனிப்படை போலீசாரிடம் செழியன், கார்த்திகேயன் ஆகியோர் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் நாகை போலீசார் அழைத்து சென்றனர்.
வேறு வழக்கில் விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு இன்னொரு வழக்கு குற்றவாளிகள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
