அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்: நாராயணசாமி
புதுவை: இந்திய அரசியலமைப்பு மற்றும் யூனியன் பிரதேச சட்டங்களின் படி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராணயசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநில தலைமை செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் செவ்வாய்கிழமை நடந்தது.

இந்த கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வராதது குறித்தும், சரிந்திருக்கும் புதுவை அரசுத்துறையை சீரமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறுகையில், புதுவையில் சட்டம் ஒழுங்கு, அரசு ஊழியர்கள் சம்பந்தபட்ட முடிவு, நிலம் சம்பந்தமான முடிவை எடுப்பதற்கு மாநில அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரமுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம், யூனியன் பிரதேச சட்டங்களின் படி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். சென்னை உயர் நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக மாற்ற தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்பதாகவும் நாராயணசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications