நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு தேவைதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசு, தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஒரு நவோதயா பள்ளியை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு நவோதயா பள்ளிக்கும் 30 கோடி ரூபாய் கட்டிடப் பணிகளுக்காகவும், பள்ளியின் நிர்வாகச் செலவுகளுக்காகவும் ஒதுக்கப் பட்டுள்ளது.

சராசரியாக ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூபாய் 85 ஆயிரம் வீதம், ஆண்டு தோறும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்காக, மத்திய அரசு செலவு செய்ய உள்ளது. இது தவிர மாநில அரசு ஒவ்வொரு பள்ளிக்காகவும் 30 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்.

Navodaya schools in Tamil Nadu

இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் 80 மாணவர்கள் வீதம், ஒரு பள்ளியில் மொத்தம் 560 மாணவர்கள் இருப்பார்கள். 32 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து நவோதயா பள்ளிகளையும் சேர்த்தால் 17 ஆயிரத்து 920 மாணவர்கள் மட்டுமே சேர முடியும்.

2012ம் ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் 55 ஆயிரத்து 667 அரசுப் பள்ளிகள் இருந்தன. ஒரு கோடியே 28 லட்சத்து 55 ஆயிரத்து 485 மாணவர்கள் அங்கு பயின்றனர். அவர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே பராமரிப்பு பணிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்கிறது. அது தவிர ஆசிரியர்களின் சம்பளம் மட்டும்தான் அரசுக்கு ஆகும் செலவு.

32 நவோதயா பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடத் தயாராக உள்ள அரசு, அதை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 55 ஆயிரத்து 667 அரசுப் பள்ளிகளுக்கு வழங்கினால், அங்கு ஸ்மார்ட் வகுப்பறை உட்பட, அனைத்து கட்டமைப்புகளையும் செய்ய முடியுமே.

அதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம் தேவைப்படாது. மிகக்குறைவான பட்ஜெட்டிலேயே அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, மற்றும் பயிற்சி வழிகளை முற்றிலும் மேம்படுத்த முடியும். ஆனாலும் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை ஆரம்பிக்க மத்திய அரசு உறுதியாக இருப்பது எதற்காக?

நவோதயா பள்ளியில் இந்தி கற்பிக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமா? அந்த பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் இந்தி பயில்வார்கள். 9ம் வகுப்பு வரைதான் தேர்வு உண்டு. ஆனால் இந்திப் பாடம் கட்டாயம் உண்டு. இது என்ன கல்வி முறையோ?

அந்த இந்திப் பாட தேர்வில் தோல்வி அடைந்தாலும், தேர்ச்சி பெற்றதாக அடுத்த வகுப்பிற்கு மாற்றிவிடுவார்கள். 9ம் வகுப்பு இந்தியில் தோல்வி என்றாலும், மாணவன் 10வது வகுப்பிற்கு வந்து விடுவார். 10ம் வகுப்பில் இந்திப் பாடம் இல்லாமலேயே தேர்ச்சி பெற முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை நவோதயா பள்ளிகள் இயங்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் இந்திப் பாடம் கிடையாது. மாணவர் விரும்பினால் விருப்பப் பாடமாக படித்துக் கொள்ளலாம்.

அதாவது, தேர்வு முறையே இல்லாத இந்திக் கல்வியை கொடுத்து, 'வகுப்புக்கு வந்தா மட்டும் போதும்' என்று சொல்லிக் கொடுக்கும் கல்வி முறை மிகப்பெரிய மோசடி அல்லவா? அந்த நேரத்தில் ஒரு மாணவன், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். சமூக அறிவியல் படிக்கலாம். ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடலாம். கணிணி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தலாம். இளம் வயதிலேயே விஞ்ஞானிகூட ஆகலாம். ஆனால் இந்தி என்ற பெயரில் 4 ஆண்டுகள் மாணவர்களின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது. இது இந்தித் திணிப்பே தவிர வேறொன்றுமில்லை.

இதை விடுத்து மத்திய அரசின் 2 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பங்கை தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசுப் பள்ளிகளிக்கு வழங்கினால், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன கட்டமைப்புகள் செய்து தர முடியும். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க முடியும்.

மாநில அரசின் 960 ஏக்கர் நிலமும் பாழ் மற்றும் ஆண்டுதோறும் மத்திய அரசின் 2 ஆயிரம் கோடி ரூபாய் வீணாவதைத் தவிர, நவோதயா பள்ளியால் தமிழக மாணவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை.

- கவிதா பாண்டியன்

குறிப்பு : கட்டுரையாளர் கவிதா பாண்டியன் அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழக கிராமப்புற மாணவர்களுக்காக 7 ஆண்டுகளாக ஸ்கைப் மூலம் ஆங்கிலம் மற்றும், கம்ப்யுட்டர் பாடங்களுக்கு, தன்னார்வலர்களுடன் இணைந்து தனி வகுப்புகள் எடுத்து வருகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Is Navodhaya Schools need to Tamil Nadu? Here is Kavitha Pandian's analysis.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற