மோடியால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்... முதன்முறையாக பிரச்சாரத்தில் மோடியைப் புகழ்ந்த கேப்டன்
அரக்கோணம்: நாட்டில் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். அவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையோடு நானும், கூட்டணிக் கட்சிகளும் இணைந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கடும் இழுபறிகளுக்கிடையே பாஜக-தேமுதிக கூட்டணி உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனால், கூட்டணி முடிவாகாத நிலையிலேயே கடந்த வெள்ளியன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் விஜயகாந்த்.
பிரச்சாரத்தைத் துவக்குவதற்கு முன்னதாக அதிரடியாக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்காக ஓட்டுக் கேட்டுப் பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த். எனவே அக்கூட்டங்களில் பாஜக மற்றும் மோடி குறித்து அவர் எதுவும் வாய் திறக்கவில்லை.
ஆனால், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பிரச்சாரத்தில் முதன்முறையாக மோடி குறித்து விஜயகாந்த் பேசியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது :-

ஊழலை ஒழிக்கும் சக்தி...
பாஜகவுடன் தேமுதிகவின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என ஆசைப்பட்டோம். நாடு வல்லரசாக வேண்டுமெனில் ஊழல் இருக்கக் கூடாது. ஊழலை ஒழித்திடுவோம், ஊழல் எதிர்ப்பு மாநாட்டை முதன்முதலில் நடத்தியது தேமுதிக. அந்த ஊழலை எதிர்க்கும் ஒரே சக்தி நரேந்திர மோடிதான்.

நம்பிக்கையோடு கூட்டணி...
குஜராத் மாநிலம் மோடியால் வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் நரேந்திர மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த நம்பிக்கை என்றும் கெடாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையோடு தேமுதிகவும், கூட்டணி கட்சிகளும் இணைந்துள்ளோம்.

லோக் ஆயுக்தாவை எதிர்க்கும் கட்சிகள்...
அதிமுக, திமுக இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது. லோக் ஆயுக்த நாடு முழுவதும் வந்தாலும், தமிழ்நாட்டில் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது திமுகவும், அதிமுகவும்தான்.

எம்.ஜி.ஆரை மறந்த ஜெயலலிதா....
சாலை வசதி இல்லை, விவசாயம் அழிந்து வருகிறது, மணல் கொள்ளை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. வறட்சி மாநிலமாக அறிவிக்கவா ஒரு முதல்வர் வேண்டும். அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என வைத்தவர்கள், எதற்காவது எம்ஜிஆர் பெயரை வைத்திருக்கிறார்களா?

நல்லது நடக்க வாக்கு கேட்கிறோம்..
பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தங்க நாற்கரச் சாலை போடப்பட்டது. அந்த சாலை மக்களுக்கு பயன்படுகிறது. அப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.

கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஏற்பேன்...
கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் யார், யார் எங்கு நிற்கிறார்கள் என்பதை அறிவிப்பார்கள். பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று எண்ணாமல் அவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன். எனக்கு பிடித்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தான். அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும்' என இவ்வாறு விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கேப்டனின் ‘புதிய ஸ்டைல்’...
வழக்கமாக தான் பேசும்போது யாராவது இடையில் பேசினால், உடனடியாக அவர்களைக் கண்டிப்பார் கேப்டன். கடந்த முறை தன் பெயரைத் தெரிவித்து ஒரு வேட்பாளார் அடி வாங்கியதை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் இம்முறை அதற்கு மாறாக தனதி பிரச்சாரத்தின் இடையில் உள்ளூர் பிரச்னைகள், விவசாயிகள் பிரச்னை, நெசவாளர் பிரச்னை உள்ளிட்ட பார்வையாளர்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications