• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. மயிலாடுதுறையில் பயங்கரம்

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: ரூ. 4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகரீகமும், பண்பாடும் எவ்வளவு மேம்பட்ட போதிலும், சில மனிதர்களிடம் இன்னமும் பல கீழ்த்தரமான பழக்கவழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமானது வரதட்சணை. திருமண பந்தத்தை ஏதோ சந்தைக் கடை வியாபாரம் போல பேரம் பேசும் வரதட்சணை பழக்கம், இன்னும் நம் நாட்டில் தொடரவே செய்கிறது. ஏழை, செல்வந்தர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் தங்கள் தகுதிக்கேற்ப வரதட்சணை வாங்கும் நடைமுறையால் பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. சில சமயங்களில் எல்லை மீறும் பேராசை, வரதட்சணை கொடுமையாக மாறி தற்கொலை, கொலை போன்ற சம்பவங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றன. அப்படியொரு அசம்பாவித சம்பவம்தான் மயிலாடுதுறையில் அரங்கேறி இருக்கிறது.

Newly Married woman Burnt To Death Over Dowry Issue In Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம் - உஷா ராணி தம்பதியரின் மகன் கார்த்திக் (29). இவருக்கும் மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் - ஜெகதாம்பாள் தம்பதியனரின் மகளான தர்ஷிகா (23) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்தாக தெரிகிறது.

இதனிடையே, திருமணமாகி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த சூழலில், தான் ஒப்பந்தப் பணி எடுத்து வேலை செய்யவுள்ளதால் மேலும் ரூ.4 லட்சம் தேவைப்படுவதாகவும், அதனை வீட்டில் இருந்து வாங்கித் தருமாறும் மனைவியிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார் கார்த்திக். இதனால் மன உளைச்சலுக்கான தர்ஷிகா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர், ஊர் பெரியவர்கள் இரு வீட்டாரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தியதை அடுத்து, தர்ஷிகா கடந்த ஜூன் 5-ம் தேித மீண்டும் தனது கணவன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜூன் 30-ம் தேதி தர்ஷிகாவின் உடலில் கொதிக்கும் வெந்நீர் கொட்டிவிட்டதாக அவரது பெற்றோருக்கு கார்த்திக்கின் வீட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கு சென்று பார்த்த போது தர்ஷிகாவின் உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை அங்குள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் கொண்டு சேர்த்தனர். ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தர்ஷிகா, சிகிச்சை பலனின்றி கடந்த 23-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கணவர் கார்த்திக் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தர்ஷிகா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக அவரது குடும்பத்தினர் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் புகார் அளித்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது தர்ஷிகா இதுதொடர்பாக எழுதிய கடிதத்தையும், வீடியோ வாக்குமூலத்தையும் கோட்டாட்சியரிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, கோட்டாட்சியர் ரவி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது தர்ஷிகாவின் உடலில் ஊற்றப்பட்டது மண்ணெண்ணையோ, பெட்ரோலோ அல்ல என்றும், வேறு ஏதோ வீரியமிக்க திரவத்தை அவர் மீது ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார். எனவே அது என்ன திரவம் என்பதை அறிவதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தர்ஷிகாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் அவர் தெரிவித்தார்.

திருமணமாகி 5 மாதத்திற்குள் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Newly married woman burnt to death over dowry issue In Mayiladuthurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X