கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- மத போதகர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை
நீலகிரி: கோத்தகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் வசித்து வந்தவர் அருள்தாஸ். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மத போதகர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன் குன்று பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். மத போதனைக்காக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், கோத்தகிரி குண்டாடா பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயர்கல்வி பயில வசதியில்லாமல் இருந்த நிலையில், அம்மாணவிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்ததோடு, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிலேயே தங்கிப் படிக்கவும் உதவியுள்ளார் அருள்தாஸ்.
இந்நிலையில், மத போதகர் அருள்தாஸ் பாலியல்ரீதியாக தனது மகளைத் துன்புறுத்தி வருவதாக மாணவியின் தந்தை மாயழகன் என்பவர் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த காவல் துறையினர் அருள்தாசை கைது செய்தனர்.
இவ்வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்திருந்தனர். அதனடிப்படையில் மத போதகர் அருள்தாசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications