பெரும் மழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் ஓராண்டுக்கான மழைபொழிவில் 48 சதவீதம் அளவுக்கான மழையை தமிழகம் பெறுகிறது.
சென்னை: இன்று அல்லது நாளை தமிழகத்தில் வட கிழக்கு பருவழை தொடங்க வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை காலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கிவிட்டது.
வியாழக்கிழமையான இன்று, அல்லது நாளை தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழை
தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல், 28ம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 5 செ.மீ. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 4 செ.மீ., அரண்மனைபுதூரில் 3 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சாத்தூர், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் உத்திரமேரூரில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை முக்கியம்
வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் ஓராண்டுக்கான மழைபொழிவில் 48 சதவீதம் அளவுக்கான மழையை தமிழகம் பெறுகிறது. இந்த காலகட்டத்தில் தமிழகம் சராசரியாக 44 செ.மீ. மழை பெறுகிறது.

சென்னை வெள்ளம்
2015ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை உட்பட பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வழக்கத்தைவிட அந்த ஆண்டு 53 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. ஆனால் 2016ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. 62 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது.

அதிக மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை அதிகம் பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெள்ள சேத தடுப்பு நவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications