For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் நியாயம் கேட்கிறேன், மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். "ஒன்இந்தியா"வுக்கு ஜோதிமணி சிறப்புப் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: நான் நியாயம் கேட்கிறேன். மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். அரவக்குறிச்சியைத் தவிர வேறு எங்கும் போட்டியிட மாட்டேன். அரவக்குறிச்சி காங்கிரஸுக்குக் கிடைக்காதது மக்களிடையே எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் குறிப்பிடத்தக்க இளம் தலைவர் என்றால் அதில் முதல்வரிசையில் ஜோதிமணிக்கு இடம் உண்டு. அயராமல் உழைப்பவர். ராகுல் காந்தியால் பாராட்டப்பட்டவர்.

தான் சார்ந்த பகுதிக்காக ஓய்வில்லாமல் உழைத்து வருபவர். எளிமையான பெண்மணி. ஜோதிமணியைப் பற்றி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஜோதிமணியும், அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அரவக்குறிச்சி தொகுதி மக்களும் தற்போது அதிர்ந்து போயுள்ளனர். காரணம் அந்தத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாத காரணத்தால்.

இருப்பினும் தான் தொடர்ந்து போட்டியில் உள்ளதாக ஜோதிமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் "ஒன்இந்தியா- தமிழ் "சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது.

 வேறு தொகுதி ஒதுக்கப்பட்டால் போட்டியிடுவீர்களா?

வேறு தொகுதி ஒதுக்கப்பட்டால் போட்டியிடுவீர்களா?

அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து மாறி வேறு எங்கும் போட்டியிடும் உத்தேசம் எனக்கில்லை. ஏனெனில், மக்களை மையப்படுத்தும் வகையிலான நேர்மையான, எளிமையான பரப்புரையில் 9 மாதமாக ஈடுபட்டுள்ளேன். இது மக்களின் நடுவே பலத்த மதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. என்னோட முயற்சியால் நோட்டாவிற்கு ஓட்டுபோட்ட இளைஞர்கள் கூட இந்தத் தேர்தலில் வாக்களிக்க தயாரா இருக்காங்க. மக்களின் பிரச்சினைக்கு உழைக்காத, மக்களை சந்திக்காத வேட்பாளர்களுக்கு மத்தியில் இந்த சூழ்நிலையை மாற்றவே நான் உழைத்திருக்கிறேன். இது கொள்கை ரீதியான தேர்தல் பரப்புரை. அதனால் விட்டுக் கொடுப்பது கடினம்.

 காங்கிரஸ் மேலிடத்தில் பேசியுள்ளீர்களா?

காங்கிரஸ் மேலிடத்தில் பேசியுள்ளீர்களா?

9 மாதத்திற்கு முன்பாக பரப்புரை ஆரம்பிக்கும் போதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரிடம் அனுமதி பெற்றே ஆரம்பித்தேன். ஆனால், போகப் போக அவருடைய அழுத்தம் குறைந்துவிட்டது. திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு காங்கிரஸ் கூட்டணியில் இந்தத் தொகுதியைப் பெற அவர் அதிக அழுத்தம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை நான் முன்வைக்கின்றேன்.

 சுயேட்சையாக நிற்கப் போகீன்றீர்களா?

சுயேட்சையாக நிற்கப் போகீன்றீர்களா?

என்னைப் பொறுத்த வரையில் நான் நியாயம் கேட்கின்றேன். என் தொகுதி மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். எனவே, அவர்களே என் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் செயல்பட வேண்டும். அதிமுக அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்கின்றார் அவர். ஆனால், ஒரு மணல் கொள்ளைக்காரருடன் இணைந்து மாற்று அரசியல் எப்படி சாத்தியம்?

 மணல் கொள்ளையரை ஆதரிக்க முடியாது

மணல் கொள்ளையரை ஆதரிக்க முடியாது

கரூரில் கடுமையான பிரச்சினை மணற்கொள்ளை. விவசாயம் இல்லை. குடிநீர் கிடையாது. கரூர் மக்களின் வாழ்க்கையை ஒட்ட உறிஞ்சுகிற ஒரு வேட்பாளரை எப்படி கட்சி ஆதரிக்க முடியும்? அதுவும் மணற்கொள்ளைக்கு எதிராக செயல்படுகிற என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

 இளைஞர் காங்கிரஸாரை ஒழிக்கும் முயற்சி

இளைஞர் காங்கிரஸாரை ஒழிக்கும் முயற்சி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை இளைஞர் காங்கிரஸினரையே ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் பணியில் தமிழக தலைமை ஈடுபட்டிருப்பது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.

 தமிழக தலைமை காரணமா?

தமிழக தலைமை காரணமா?

மத்தியில் உங்களுக்கான ஆதரவு இருந்தும் இந்த பிரச்சினைக்கு காரணம் தமிழகத் தலைமைதான் என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக. அவர் வலியுறுத்தியும் கூட தமிழகத் தலைமை இதில் ஒரு உறுதியான முடிவினை எடுக்கவில்லை.

 ராகுல் காந்தியால் தமிழக தலைவர்களிடம் உறுதியாக பேச இயலவில்லையா?

ராகுல் காந்தியால் தமிழக தலைவர்களிடம் உறுதியாக பேச இயலவில்லையா?

ராகுல் காந்தி நேரடியாக தலையிட்டு இரண்டு நாட்களாக அரவக்குறிச்சி தொகுதியைப் பெற வலியுறுத்தியும், தமிழக காங்கிரஸ் தலைவரால் அதனைப் பெற முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படியெனில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்று நான் கூறுகின்றேன். என்னுடைய அரசியல் நிலைப்பாடு, மக்களின் அரசியல் மீதான வெறுப்பினை மாற்ற வேண்டும் என்பதானதுதான்.

 மணற் கொள்ளைக்குத் துணை போகும் காங்கிரஸ் தலைவர்

மணற் கொள்ளைக்குத் துணை போகும் காங்கிரஸ் தலைவர்

ராகுல் காந்தி அவர்கள் சொல்வது போல மக்களை முன்னிலைப்படுத்திய அரசியலையே நான் முன்னெடுத்திருக்கின்றேன். அதைவிட்டுவிட்டு மணற்கொள்ளைக்கு துணை செல்பவர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரே துணை செல்வது வருத்தத்தினை அளிக்கின்றது. மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களை ஒழித்துக் கட்ட தமிழகத் தலைவர் முயல்கிறார்.

 வேறொருவர் நிறுத்தப்பட்டால் உங்கள் முடிவென்ன?

வேறொருவர் நிறுத்தப்பட்டால் உங்கள் முடிவென்ன?

நிச்சயமாக சுயேட்சையாக போட்டியிடுவேன். அரவக்குறிச்சி 25 வருடகாலமாக எம்.எல்.ஏ இல்லாத தொகுதி போன்றே இருந்து வருகின்றது. 89 ஆம் ஆண்டில் இங்கு எம்.எல்.ஏவாக இருந்த சதாசிவம் அவர்களின் மரணத்திற்கு பிறகு சரியான தலைமை இங்கு இல்லை. அதிமுகவின் செந்தில் பாலஜியும் சரி, திமுகவின் கே.சி.பழனிச்சாமியும் சரி மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள். அதனால் என்னைப் போன்ற நேர்மையான வேட்பாளரையே மக்கள் விரும்புகின்றனர். இதனை கட்சி வித்தியாசம் இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியானவுடன் அனைவருமே வலியுறுத்தினார்கள். அதனால் மக்கள் ஆதரவு எனக்கு முழுமையாக இருக்கின்றது. எங்கள் தொகுதிக்கான கவுரவத்தினை மீட்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

 அரவக்குறிச்சியில் மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள்?

அரவக்குறிச்சியில் மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள்?

இங்கு நான் 20 வருடமாக இருந்து வருகின்றேன். 10 வருடம் யூனியன் கவுன்சிலராக இருந்துள்ளேன். அமராவதியில் மணற்கொள்ளை நடந்தபோது 3 வருட காலம் மக்களைத் திரட்டி போராடி வந்துள்ளேன். ரிட் மனு தாக்கல் செய்து மணற்கொள்ளையை தடுத்து நிறுத்தியிருக்கின்றேன். 15 ஆண்டுகாலமாக குடிநீர் மறுக்கப்பட்ட தலித் மக்களுக்கு போராடி தண்ணீர் வாங்கிக் கொடுத்துள்ளோம். மேலும், மக்களின் தொழில் பிரச்சினைகளைக் கூட மற்ற மாநிலங்களில் தீர்த்து வைத்துள்ளேன். இளைஞர்கள், மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்புக்கான சிறப்பு உதவிகளையும் செய்து வருகின்றேன். எம்.எல்.ஏ, அமைச்சராக யார் இருந்தாலும் மக்கள் நேரடியாக அணுகும் வகையில் நான் இருந்து வருவதால் மக்களும் என் மேல் முழு மதிப்பு வைத்துள்ளனர்.

 சுயேட்சையாக நின்று வென்றாலும் காங்கிரஸில் தொடர்ந்து நீடிப்பீர்களா?

சுயேட்சையாக நின்று வென்றாலும் காங்கிரஸில் தொடர்ந்து நீடிப்பீர்களா?

அதன்பிறகும் நான் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காங்கிரஸ் மற்றும் மத்திய தலைமையுடன் எனக்கும் எந்த மனவேறுபாடும் இல்லை. காங்கிரஸின் கொள்கை நிலைப்பாடுகளை நான் மதிக்கின்றேன். பின்பற்றுகின்றேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்தது காங்கிரஸ் அரசு. ராகுல் காந்தி இரண்டு நாட்கள் அரவக்குறிச்சி தொகுதிக்காக போராடியிருக்கின்றார். என் போன்ற சாதாரண தொண்டர்களுக்காக மத்திய தலைமை எப்போதும் போராடி வருகின்றது. எனினும், தமிழக காங்கிரஸ் தலைவர் தவறிழைக்கும்போது அதனைத் தட்டிக் கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.

 மக்கள் என்னோடு கை கோர்க்க வேண்டும்

மக்கள் என்னோடு கை கோர்க்க வேண்டும்

மக்கள் அனைவருமே மாற்றம் வரவேண்டும். அரசியல் களம் தகுதியானதாக மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி மாற்றத்தினை விரும்பும் அனைவரும் அரவக்குறிச்சியில் எங்களுடன் மாற்றத்திற்காக கை கோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார் ஜோதிமணி.

English summary
Jhothimani's exclusive interview about Aravakurichi constituency For One india.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X