அரைமணி நேரம் அம்மா புகழ்பாடி பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்: எதிர்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதாவின் புகழ்பாடி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக அம்மா புகழ் பாடி கவிதை வாசித்தார் ஓ.பன்னீர் செல்வம். அதில் ஜெயலலிதாவின் துதி பாடல்தான் அதிகம் இருந்தது.

"அம்மா நீங்கள் சாணக்கியனையும் மாணவனாக்கும் ஞானம் பெற்றவர்
நீங்கள் ஊருக்கே வழிகாட்டும் சிந்தனை பெற்றவர்
அம்மா உங்களை வணங்க என்ன தவம் செய்தோம்"
என்று கவிதை வாசிக்க வரிக்கு வரி மேஜையை தட்டினர் அதிமுகவினர். அதிமுகவின் சாதனைகளை சொல்ல ஒருநாள் போதாது எனவே காலம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன் என்று கூறிவிட்டு பட்ஜெட் உரையை வாசித்தார் ஓ.பன்னீர் செல்வம்.
முன்னதாக பட்ஜெட் உரை வாசிக்கும் முன்பாக திமுகவினர் சபையில் பேச அனுமதி கேட்டனர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே, திமுக, மார்க்சிஸ், இ.கம்யூனிஸ்ட், காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக ஆட்சி காலத்தில் கடன் சுமை பல மடங்காக உயர்ந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்த இடைக்கால பட்ஜெட்டினால் எந்த பயனும் இல்லை என்று கூறிய அவர், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தார்மீக உரிமையை அதிமுக அரசு இழந்து விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் முடியும். அதன் பிறகு, பிற்பகலில் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். சட்டசபை நிகழ்வுகள் 4 நாட்கள் நடக்கக்கூடும் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications