For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதைப் பற்றியும் கவலைப்படாமல் அணைகளைக் கட்டித் தள்ளும் கர்நாடகா! #cauvery

Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அதிக அளவிலான அணைகளைக் கட்டிக் குவித்திருக்கிறது. ஆறுகளை விட பெரிதாக கால்வாய்களைக் கட்டி வைத்துள்ளனர். அவற்றை நிரப்பவே ஆற்றின் முழுத் தண்ணீரும் போதாது என்று கவிஞர் மகுடேசுவரன், கர்நாடகம், காவிரி ஆற்றை எப்படியெல்லாம் தமிழகத்துக்கு வர விடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்று விவரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் இட்டுள்ள பதிவு:

கர்நாடகாவில் அண்மைக் காலத்தில் ஊடும் பாவுமாக அலைந்தவன் சொல்கிறேன். அங்கே ஆறுகளைவிடப் பெரிதாக கால்வாய் கட்டிவைத்திருக்கிறார்கள். ஒரு கால்வாயை நிரப்ப அவ்வாற்றின் முழுத்தண்ணீரும் போதாது. எங்குப் பார்த்தாலும் எப்போதும் புதிதாய் ஒரு கால்வாயையோ வாய்க்காலையோ கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

அங்குள்ள ஆறுகளுக்கு மழைநீர் பிடிப்புப் பகுதிகள் பரந்து விரிந்த பரப்பளவில் உள்ளன. சிறு மழைக்கே வெள்ளம் பெருகும் வாய்ப்புள்ளது. ஊர்ப்புறங்கள் குறைவாகவும் பயிர்த்தொழில் நிலங்கள் மிகுந்தும் உள்ளன. ஓர் ஊருக்கும் இன்னோர் ஊருக்குமிடையே கற்பனைக்கப்பாற்பட்ட தொலைவு விளைநிலங்களாக ஆக்கப்பட்டிருக்கின்றன. காவிரி ஆற்றுத் தண்ணீரை எவ்வளவிற்கு வளைத்துக்கொள்ள முடியுமோ அத்தனையையும் கொள்கிறார்கள்.

காவிரி நீரில் இவ்வளவு முனைப்பைக் காட்டும் அவர்கள் வடகர்நாடகத்தில் ஆந்திரத்திற்கும் கடலுக்கும் வீணாகச் செல்லும் துங்கபத்திரை, கிருட்டிணை ஆற்றின் நீரைத் தொடுவதே இல்லை. ஏனென்றால் அந்த நதிப்படுகைகள் பள்ளத்தில் பாய்கின்றன. நதிநீரைக் கால்வாய் வழியாய் வெளியேற்றுமளவுக்குக் கரைப்பகுதிகள் தாழ்வாய் இல்லை. மலைபோல் உயரமாய் இருக்கின்றன. அதனால் அந்நதி நீரை நினைத்தே பார்க்க முடியாது. அதற்காக அந்த நதிகளை கர்நாடக அரசு கைவிட்டுவிட்டது என்றும் சொல்லமுடியாது. இயன்றவிடங்களில் எல்லாம் சிறிதோ பெரிதோ அணைதடுத்து வைத்திருக்கிறார்கள்.

தென்னிந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட 'தலைக்கோட்டைப் போர்' நடந்த நிலப்பரப்பை வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு தேடினேன். கிருட்டிணை ஆற்றங்கரையில் இருதரப்புப் படைகளும் குவிக்கப்பட்டன. ஆற்றை யார் கடப்பது என்பதே அப்பெரும் போரின் வெற்றிக்குத் தூண்டாக இருந்தது. என்னே வியப்பென்றால், இன்று அப்போர் நடந்த இடம் 'பசவசாகர் அணைக்கட்டின்' நீர்ப்பரப்புக்குள் மறைந்துவிட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் அணைகட்டித் தள்ளிவிட்டார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

கர்நாடகா, தன் தேவைபோக மீதத்தையே மிகுவெள்ளத்தையே தமிழகத்திற்குத் தருமென்றால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட நமக்குக் கிடைக்காது. அவ்வளவு ஆழ அகலக் கால்வாய்களை வெட்டி வைத்திருக்கிறார்கள்.

வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீர் என்றொரு கருத்து வைக்கப்படுகிறது. ஆற்றுத் தண்ணீரில் குறிப்பிட்ட விழுக்காடு கழிமுகத்தில் கடல்கலந்தால்தான் கடற்கரைப் பகுதிகள் இயற்கை வளத்தோடு இருக்கும். மீன்வளம் பெருகும். கடலுப்பு நிலத்தடி நீரில் கலப்பது மட்டுப்படும். அதனால் வெள்ளநீரில் ஒரு பகுதி கடலில் சேர்ந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் கடலோர மாவட்டங்கள் வளமிழந்து பாலையாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் காவிரி நீரில் ஒரு பகுதியைக் கடலில் கலப்பதற்கென்றே கர்நாடகா விடுவிக்க வேண்டும்.

சீனாவில் மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தைக் கட்டி பாலையை விளைநிலமாக்கினார்கள். இப்போது அவ்வாற்றின் கழிமுகப்பகுதி, வரலாற்றில் இல்லாதபடி வறண்டு, பல்லுயிர்த்தொடர்பறுந்து விட்டதாம். எண்ணற்ற மீன்வகைகளும் நீர்வாழ் உயிர்களும் இனமில்லாதபடி அழிந்துவிட்டனவாம். நேசனல் ஜியாக்ரபிக் ஆவணப்படமாக இதை விளக்கும் படங்களை நீங்கள் யுடியூபில் பார்க்கலாம். இவ்விழப்பு பாலையைச் சோலையாக்கியதைவிட கொடிய விளைவைத் தரக்கூடும் என்கிறார்கள். கழிமுகப்பகுதியின் உயிர்ச்சூழலே இதனால் குலைந்துவிட்டதாம்.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு மட்டுமின்றி கடலில் கலப்பதற்கென்றும் நீரைத் தரவேண்டும். நதிகள் நீரற்றுப் போனால் நம் நிலத்தடி நீர் முழுமையாய் வற்றிவிடும். அங்கங்கே நீர்பிடித்துக்கொண்டிக்கின்ற கிணறுகளும் தூர்ந்துவிடும். குடிக்கின்ற தண்ணீரை இறக்குமதி செய்கின்ற நிலையும் வரலாம். சிறிதும் தாழ்த்தாமல் தமிழ்நாட்டரசு நமக்குரிய தண்ணீரைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறவர்களின் வாய்க்கால் மடைசார்ந்த இடர் இல்லை. தொண்டைக்குழிக்கு நீர் வேண்டும் என்னும் விடாயுள்ள நாம் ஒவ்வொருவரும் குரலெழுப்ப வேண்டிய நேரமாகும்.

- கவிஞர் மகுடேசுவரன்

English summary
Poet Magudesuvaran has explained the sorrow state of Tamil Nadu in Cauvery issue in his Facebook post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X