கொலையாளியை பிடிக்க கொலையாளியுடனே துப்பு துலக்கிய "பலே" போலீஸ்
சென்னை அருகே கடத்தல்காரரை பிடிக்க அவரிடமே போலீஸார் உதவி கேட்ட சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சென்னை: திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரியின் மகனை கடத்தி கொன்று பணம் கேட்டு மிரட்டியவரை கூடவே வைத்துக் கொண்டு போலீஸார் மர்ம கும்பலை தேடி வந்தது வினோதமாக உள்ளது.
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் அஜய்குமார். இவர் மெட்ரோ ரயில் பணிகளின் மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அவினாஷ் பூஷன்.
இவர் ஐடிஐ முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தார். அவர் கடந்த 7 -ஆம் தேதி காணவில்லை. கடந்த 10-ஆம் தேதி அவினாஷின் செல்போனில் பேசிய மர்மநபர் ஒருவர் ஹிந்தியில் பேசியுள்ளார்.

கடத்தல்
அப்போது அந்த நபர் அவினாஷை கடத்தி பெங்களூரில் வைத்துள்ளதாகவும், ரூ.50 லட்சம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த அஜய்குமார், தனது மகன் கடத்தப்பட்டது குறித்து சாத்தங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஹிந்தி தெரியாது
காவல் நிலைய ஆய்வாளர் லிங்கேஷ்வரன் தனக்கு ஹிந்தி தெரியாது என்பதால் ஹிந்தி தெரிந்த கஞ்சா வியாபாரி வெங்கடேசனின் உதவியுடன் வழக்கை விசாரித்து வந்தார். போலீஸில் ஏன் புகார் கொடுத்தீர் என்று கேட்டு அஜய்குமாருக்கு மர்மநபரிடம் இருந்து போன் வந்தது.

எண்ணூரில் சிக்னல்
இதனால் துணை ஆணையர் கலைசெல்வத்திடம் புகார் அளித்துள்ளார். அஜய்குமாரிடம் பேசிய செல்போன் எண்ணை கொண்டு துப்பு துலக்கியதில் கடத்தல் கும்பல் எண்ணூரை அடுத்த சடையங்குப்பத்தில் இருந்து பேசுவது தெரியவந்தது.

டம்மி ரூபாய் நோட்டு
சென்னையில் இருந்து கொண்டே பெங்களூரில் மர்மநபர்கள் பேசியதால் போலீஸாரும் சாமர்த்தியமாக அவினாஷை மீட்க திட்டமிட்டனர். அதன்படி பாரிமுனை சென்று சினிமாவில் பயன்படுத்தும் டம்மி ரூபாய் நோட்டுகளை ரூ.50 லட்சத்தில் வாங்கி ஒரு டிராவல் பேக்கில் அடுக்கி வைத்தனர்.

கஞ்சா வியாபாரி
அப்போது கஞ்சா வியாபாரி வெங்கடேசனையும் துணைக்கு அழைத்து கொண்டு சென்றனர். அதன்பிறகு மர்மநபரிடம் இருந்து போன் ஏதும் வராததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் தங்களது விசாரணையின் கோணத்தை மாற்றினர். அவினாஷ் காணாமல் போன அன்று கஞ்சா வியாபாரி வெங்கடேசனுடன் சுற்றியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வெங்கடேசனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக் தகவல்கள் வெளிவந்தன.

மது அருந்தி...
இந்த வெங்கடேசன் அவினாஷின் பள்ளி கால நண்பராவார். இருவரும் சேர்ந்து நண்பர்களுடன் மது அருந்தி விட்டு அண்ணா நகரில் உள் மசாஜ் பார்லருக்கு சென்று வருவது வழக்கமாம். இதற்காகும் செலவை வெங்கடேசனே கொடுத்து வந்துள்ளதால் 7-ஆம் தேதி அன்று வெங்கடேசன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவினாஷுடன் மது அருந்தியுள்ளார்.

அவினாஷை கடத்த திட்டம்
அப்போது தகராறு முற்றவே அவினாஷிடம் வெங்கடேசன் பணம் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவினாஷை கடத்தி பணத்தை வசூல் செய்யவும் வெங்கடேசன் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதற்கு அவினாஷ் சம்மதிக்கவில்லை. தனது தந்தைக்கு மாத சம்பளமே ரூ25 ஆயிரம்தான். அவரால் அத்தகைய பெரும்தொகையை கொடுக்க இயலாது என்று கூறியுள்ளார். எனினும் அண்மையில் ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற அஜய்குமாருக்கு பெரும் தொகை கிடைத்தது தெரியவந்தது.

அடித்துக் கொலை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவினாஷை வெங்கடேசனும் அவரது கூட்டாளிகளும் அடித்துக் கொலை செய்து சடையங்குப்பத்தில் அருகில் ரயில்வே பாலத்துக்கு அடியில் உள்ள குழியில் போட்டு புதைத்துள்ளனர். இதையடுத்து அவினாஷ் உயிருடன் இருப்பது போல் காட்டி அவரது போனில் இருந்து ரூ.50 லட்சம் கேட்டு வெங்கடேசன் மிரட்டியதும் தெரியவந்தது.

ஒருவருக்கு வலை
வெங்கடேசன் அளித்த தகவலின் அடிப்படையில் கூட்டாளி ரமேஷை கைது செய்த போலீஸார் மற்றொரு கூட்டாளி சூர்யாவை தேடி வருகின்றனர். கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக கொலையாளியை உடன் வைத்துக் கொண்டு போலீஸார் திட்டங்களை தீட்டி அது தோல்வியில் முடிந்தது பரிதாபத்துக்குரியது.

சாலை மறியல்
மேலும் போலீஸார் அவினாஷின் சடலத்தை தோண்டி எடுக்காததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளியை கூட வைத்துக் கொண்டே சாமர்த்தியமாக பிடிப்பது போல் டம்மி நோட்டுகளை போலீஸார் வாங்கியது நகைப்புக்குரியதாகியது.












Click it and Unblock the Notifications