புதுச்சேரியில் ஆந்திரா அரசு பேருந்துக்கு தீ வைப்பு!
புதுச்சேரி: புதுவையில் அரசுப் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைத்திருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திரமாநிலத்திலிருந்து புதுவைக்கு வந்த அம்மாநில பேருந்துகள் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே புதுவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில், புதுவை-திருப்பதி செல்லும் ஆந்திர மாநில பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மர்ம நபர்கள் நேற்று இரவு இந்த பேருந்தின் உள்ளே ஜன்னல் கதவைத் திறந்து தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். திடீரென பேருந்தின் உள்ளே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பேருந்தின் இருக்கைகள் தீயில் கருகி சேதமடைந்து போனது. உடனே தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து புதுவை உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications