2024 மக்களவைத் தேர்தல்! தென்காசியில் களமிறங்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! பரபரக்கும் தேர்தல் களம்!
தென்காசி: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் திட்டத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதற்கான அடித்தள பணிகளை ஆரம்பித்துவிட்டார்.
கோவையிலிருந்து அடிக்கடி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடித்து வரும் கிருஷ்ணசாமி, தனது கட்சித் தொண்டர்களை தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்தி வருகிறார். தென்காசி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான தனுஷ்குமார் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எளிதாக வெல்லலாம் என கருதுகிறார் கிருஷ்ணசாமி.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது தென்காசி தொகுதி மக்களுக்கு திமுக எம்.பி. தனுஷ்குமார் கொடுத்த வாக்குறுதிகளை சேகரித்து வரும் கிருஷ்ணசாமி தரப்பு, அதில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை இப்போதே மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணிகளை தொடங்கிவிட்டது.
அதிமுக -பாஜக கூட்டணியில் உள்ள இவர், இரட்டை இலை சின்னத்திலோ அல்லது தாமரை சின்னத்திலோ போட்டியிடுவார் எனத் தெரிகிறது. பாஜக மேலிடத்துடன் கிருஷ்ணசாமிக்கு நல்ல பரிச்சயம் இருப்பதால் இவருக்கு கூட்டணியில் சீட் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே லோக்கல் அதிமுக பிரமுகர்கள் சிலர் தென்காசி தொகுதியில் அதிமுக தான் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை கட்சித் தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் கூட்டணி என்ற அடிப்படையில் தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு செல்வது உறுதியாகிவிட்ட ஒன்றாகும்.
தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய வாக்குகள் கணிசமாக இருப்பதால் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் மூலம் அதனை மொத்தமாக அள்ளிவிடலாம் எனக் கணக்கு போடுகிறது அதிமுக பாஜக தலைமை. இதனால் இப்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டது.












Click it and Unblock the Notifications