சபாநாயகர் அப்பாவு தோல்வி.. ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி.. பாஜக 3ம் இடம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் சபாநாயகர் அப்பாவு தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபரிடம் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பாஜக 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். சிட்டிங் எம்எல்ஏவாக அவர் களம் கண்டுள்ளார்.

இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணன், தவெக சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் சதீஷ் கிறிஸ்டோபர் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிரிஷா தாமரைபாண்டியன் களமிறங்கினார்.
இந்நிலையில் தான் காலை முதல் அப்பாவு பின்தங்கினார். காலை 9.40 மணி நிலவரப்படி ராதாபுரம் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்து வருகிறார். அவர் மொத்தம் 5829 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
இதற்கு அடுத்தப்படியாக அப்பாவு 5,490 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இருவருக்கும் இடையேயான வித்தியாசம் 339 ஓட்டுகளாகும். 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணன் இருந்தார். அவர் மொத்தம் 4053 ஓட்டுகள் வாங்கியிருந்தார். நாம் தமிழர் வேட்பாளர் கிரிஷா தாமரைபாண்டியன் 1084 ஓட்டுகளுடன் 4வது இடம் பிடித்தார்.
மதியம் 12.30 மணி நிலவரப்படி ராதாபுரத்தில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் 25,055 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். சபாநாயகர் அப்பாவு மொத்தம் 23,039 வாக்குகள் பெற்று பின்னடைவிலேயே தொடர்ந்தார். இவர்கள் 2 பேருக்கும் 2,016 வாக்குகள் வித்தியாசமாக இருந்தது. அதேபோல், பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணன் 18,012 வாக்குகள் பெற்றிருந்தார்.
கடைசியில் ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபரிடம் தோல்வியடைந்தார். சதீஷ் கிறிஸ்டோபர் 68,096 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். சபாநாயகர் அப்பாவு 57,340 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார். அதிமுக கூட்டணியில் களமிறங்கிய பாஜகவின் பாலகிருஷ்ணன் 51,835 ஓட்டுகள் வாங்கி 3ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் கிரிஷா தாமரைபாண்டியன் 15,145 ஓட்டுகள் வாங்கி 4ம் இடம் பிடித்தார்.












Click it and Unblock the Notifications