காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் ராகுல் காந்தி!!
சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார் ராகுல் காந்தி.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்த போதும் கருணாநிதியை சந்திப்பதை ராகுல் காந்தி தவிர்த்தே வந்தார். தமிழகத்துக்கு பல முறை ராகுல் காந்தி வந்தபோதும் கருணாநிதியை அவர் சந்தித்தது இல்லை. இது திமுகவினரிடையே நீண்டகால அதிருப்தியாக இருந்து வந்தது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உடனே ராகுல் காந்தி வந்து பார்த்தார். அப்போதும் கூட கருணாநிதியை ராகுல் காந்தி சந்திக்கவில்லை.
இந்த நிலையில் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடிதம் அனுப்பியிருந்தார். இதனிடையே கருணாநிதிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து ராகுல் காந்தி விசாரித்தார். தற்போது கருணாநிதி நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனையும் திமுக தலைமை கழகமும் தெரிவித்துள்ளன. இதனிடையே கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார்.

காவேரி மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள், மருத்துவர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவர்களின் அனுமதியுடன் கருணாநிதியையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ராகுல் காந்தி.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன் என்றார். ராகுல் காந்தியுடன் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.












Click it and Unblock the Notifications