ஏப்.14-ல் ரஜினிகாந்த் கட்சி உதயம்... ஆகஸ்ட்டில் மாநாடு- 2 அதிமுக சீனியர்கள் தாவல்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் 14-ந் தேதி அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும் ஆகஸ்ட் மாதம் கட்சி மாநாட்டை நடத்தி செப்டம்பரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் கூறிவருகிறார். ஆனால் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள்தான் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அரசியலுக்கு வந்ததாக தெரியவில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டசபை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியை தொடங்குவேன் என அறிவித்தார். ஆனாலும் அரசியல் கட்சியை தொடங்கவில்லை. அதேநேரத்தில் தமிழகத்தின் பிரச்சனைகளில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் பேட்டி தந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் ஏப்ரல் 14-ந் தேதி ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ரஜினிகாந்துக்கு ஆலோசகர்களாக துக்ளக் குருமூர்த்தியும் தமிழருவி மணியனும் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். அதற்காக ரஜினிகாந்துக்கு பாஜக நிச்சயம் உதவும். ரஜினிகாந்துக்கு பாஜக முழு அளவில் பின்னணியில் இருந்து செயல்படும்.
அதேநேரத்தில் பாஜகவில் நேரடியாக இணையவும் ரஜினிகாந்த் தயங்குகிறார். தமக்கு நெகட்டிவ் இமேஜ் வந்துவிடும் என்பதால் பாஜகவில் இணைவதை ரஜினிகாந்த் தவிர்க்கிறார் என்கின்றனர். ரஜினிகாந்தின் ஆலோசர்களில் ஒருவரான தமிழருவி மணியன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிடம் கருத்து கூறுகையில், தமிழகத்தில் ரஜினிகாந்துக்கு சாதகமான அலை வீசுகிறது. அவர் கட்சியை தொடங்கியதும் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தப்படும்.
அதன் பின்னர் செப்டம்பர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த் என கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் கட்சியில் அதிமுகவின் 2 மூத்த தலைவர்கள் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பல பிரபலங்களும் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications