பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) விதிகளின்படி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரை தன்னிச்சையாக யாராலும் நீக்க முடியாது; பாமகவின் பொதுக் குழுதான் 'தலைவர்' பதவியில் இருந்து ஒருவரை நீக்க முடியும்; நியமிக்க முடியும்; ஆகையால் அன்புமணி ராமதாஸை, பாமக தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீக்கியது செல்லாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள்.
பாமகவில் உட்கட்சி மோதல் வெடித்து வெளியே வந்துள்ளது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நிறுவனரும் அவரது தந்தையுமான டாக்டர் ராமதாஸ் அதிரடியாக நீக்கிவிட்டார். பாமகவின் செயல் தலைவராக மட்டுமே அன்புமணி செயல்படுவார் என்பது ராமதாஸின் அறிவிப்பு.

மேலும் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக தாமே பதவி வகிப்பேன்; 2026 சட்டசபை தேர்தலுக்காகவே இந்த முடிவு என்று கூறிய ராமதாஸ், அன்புமணியை நீக்கிவிட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் வெளியில் பகிரங்கமாக கூறிவிடவும் முடியாது என்றார்.
டாக்டர் ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பாமகவில் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர் ராமதாஸின் முடிவுக்கு எதிராக அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ராமதாஸின் இந்த முடிவு ஜனநாயகப் படுகொலை என்கிறார் பாமக பொருளாளர் திலகபாமா. திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் வீட்டை அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு அனைத்து பாமக நிர்வாகிகளையும் வரவழைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். ஆனால் அன்புமணியின் ஆதரவாளர்களோ, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். பாமகவில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பாமகாவின் உட்கட்சி விதிகளின்படி, தலைவர் பதவியில் இருப்பவரை பொதுக்குழுவைக் கூட்டித்தான் நீக்கவே முடியும்; டாக்டர் ராமதாஸ் நினைத்த நேரத்தில் டிஸ்மிஸ் செய்யவே முடியாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். மேலும், அன்புமணியை பாமக தலைவராக நியமித்த போது, சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டுதான் முடிவு அறிவிக்கப்பட்டது; அதேபோலவே தற்போதும் பாமகவின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டிதான் முடிவெடுக்க வேண்டுமே தவிர தன்னிச்சையான அறிவிப்பை எல்லாம் ஏற்கவே முடியாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள்.
அத்துடன், பாமக தலைவர் என்ற அடிப்படையில் அன்புமணி ராமதாஸ், பொதுக் குழுவை கூட்ட வாய்ப்புள்ளது; அந்த பொதுக் குழுவில் தம்மை புதிய தலைவராக அறிவித்துக் கொண்ட டாக்டர் ராமதாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications