For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டு கேட்க போகும்போது டீ கேட்டு நச்சரிக்கக் கூடாது!: இது ராமதாஸின் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் 15 அம்ச தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளைக் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.

Ramadoss release PMK election guidelines

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பாமக. அதில் கூறியிருப்பதாவது:-

1. தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்க வேண்டும்.

2. ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தலுக்குள் குறைந்தது 3 முறையாவது நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கூறி அவர்களை பா.ம.க.வின் நிரந்தர ஆதரவாளராக மாற்ற வேண்டும்.

3. தமிழகத்தின் பெரும்பான்மை வாக்காளர்களான பெண்கள் அதிமுவுக்கும், திமுகவுகும் ஏன் வாக்களிக்கக் கூடாது? பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பதை விளக்கும் துண்டறிக்கையை ஒவ்வொரு பெண் வாக்காளரிடமும் கொண்டு சென்று சேர்க்க/விளக்க வேண்டும்.

4. வறுமையை ஒழிக்க கல்வியும், ஆரோக்கியமும் முக்கியம். ஆனால், இவற்றை பெறுவதற்காக கடன் வாங்கி மக்கள் வறுமையில் தள்ளப்படும் நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கி யிருப்பதையும், பா.ம.க. ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மிச்சமாகும் என்பதையும் வாக்காளர்களிடம் விளக்கிப் புரிய வைக்கவேண்டும்.

5. விவசாயிகளுக்கான அனைத்து இடுபொருட்கள், வேளாண் பயன்பாட்டுக்கான கருவிகள், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான செயல்திட்டம் பாட்டாளி மக்கள் கட்சியிடம் மட்டுமே உள்ளது என்பதை விளக்க வேண்டும்.

6. பா.ம.க. முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் யார்? மத்திய அமைச்சராக இருந்த போது அவர் படைத்த சாதனைகள் என்ன? உலக அளவில் அவர் பெற்ற விருதுகள்/பாராட்டுக்கள் என்ன? தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் உருவாக்கியுள்ள செயல்திட்டம் என்ன? என்பதையெல்லாம் பொதுமக்களுக்கு விரிவாக விளக்க வேண்டும்.

7. வாக்கு கேட்கச் செல்லும் போது தேநீர் வாங்கித் தரும்படி வேட்பாளரை கேட்கக்கூடாது. மாறாக வேட்பாளருக்கு தொண்டர்கள் தேநீர் வாங்கித் தர வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி வலிமையான கட்சி... அதன் தொண்டர்கள் எதையும் எதிர்பாராதவர்கள். எனவே, பிரச்சாரத்திற்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. வேட்பாளர் சொந்த வாகனம் வைத்திருந்தால் அதில் சென்று வாக்காளர்களை சந்திக்கலாம். வேட்பாளரிடம் வாகனம் இல்லை என்றால் வாகனம் வைத்திருக்கும் நிர்வாகிகள் வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக வாகனம் அளித்து உதவ வேண்டும்.

9. அதிமுக, திமுக கட்சிகள் அளிக்கும் ரூ.1000, ரூ.500 பணத்திற்காக விலை மதிப்பற்ற ஜனநாயக உரிமையான வாக்குகளை விற்று ஏமாந்து விடக்கூடாது என வாக்காளர்களிடம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விலை மதிப்பற்ற வாக்குரிமையை விலை கொடுத்து வாங்கும் திமுக, அதிமுகவின் கலாச்சாரத்தை பிரச்சாரத்தின் மூலம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

10. பூத் செலவு என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட தேவையற்ற கலாச்சாரம் மற்றும் செலவு ஆகும். பூத் செலவு என்பது பா.ம.க.வின் அகராதியில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

11. பா.ம.க.வின் சுவர் விளம்பரங்கள் சுவற்றின் உரிமையாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றுத் தான் எழுதப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடந்த இடங்களில் சேரும் குப்பைகளை கட்சியினரே அப்புறப்படுத்த வேண்டும்.

12. ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களுடன் தொகுதி நிலையிலான தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெளியிடப்பட வேண்டும்.

13. ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளில் சாத்தியமானவற்றை தீர்ப்பதற்கான வாக்குறுதியை அளித்து, ஊர்த் தலைவர்களுடன் சமூக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

14. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் யாருக்கும் தொல்லை தராத வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். பிரச்சாரத்திற்காக செல்லும் போது ஏதேனும் இடத்தில் மற்ற கட்சியினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால் அவர்களின் பிரச்சாரம் முடிவடையும் வரை காத்திருத்து அதன் பின்னர் வாக்கு சேகரிப்பைத் தொடங்க வேண்டும். எதிர்க்கட்சியினரிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.

15. தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் நாகரீகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், கடந்த கால சாதனைகள் ஆகியவற்றைக் கூறி மட்டுமே வாக்கு கேட்க வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான அரசியலை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின் பற்ற வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக் கொள்கிறது''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The PMK founder Ramadoss has released his party's election guidelines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X