For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழைப் பயிற்றுமொழி மற்றும் கட்டாயப் பாடமாக்க சட்டம் இயற்ற வேண்டும் - ராமதாஸ்

By Shankar
Google Oneindia Tamil News

Ramadoss urges new law for implementing Tamil as medium of instruction
சென்னை: பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழி மற்றும் கட்டாயப் பாடமாக மாற்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரள அரசு பணிகளில் சேருவதற்கு அதற்குத் தகுதியான வகுப்புகளில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்கா விட்டால் மலையாள மிஷன் நடத்தும் மலையாள பட்டயப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் தான் அரசு வேலையில் சேர முடியும் என்றும், அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார்.

ஆனால், தமிழகத்தின் நிலையோ இதற்கு நேர் எதிராக உள்ளது. தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெற முடியும்; அரசு வேலை வாங்க முடியும் என்ற நிலைதான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

பட்டப் படிப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்; தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், தமிழின் பெயரைக் கூறி ஆட்சிக்கு வந்த கட்சிகளால் இந்த அடிப்படை கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை.

அதேபோல் தமிழகப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்கி சட்டம் கொண்டுவரக் கோரி கடந்த 1998 ஆம் ஆண்டு 102 தமிழறிஞர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலை இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்திய கலைஞர் அரசு, அந்தக் கோரிக்கைகளை செயல் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

அக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படாத நிலையில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கி மட்டும் 1999 ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டை விரைந்து முடித்து, தடையை நீக்கி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தமிழைப் பயிற்று மொழியாக்குவதன் மூலமாகவும் மட்டுமே தமிழை வளர்த்தெடுக்க முடியும். மலையாளத்தை வளர்ப்பதில் கேரள அரசு காட்டும் அக்கறையை, தமிழை வளர்ப்பதில் தமிழக அரசும் காட்ட வேண்டும்.

தமிழ் தொடர்பாக அரசாணைகள் பிறப்பிக்கப்படுவதால் தான் அவற்றை தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை; சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை அப்பள்ளிகள் மீற முடியாது. எனவே, தமிழை பயிற்று மொழி மற்றும் கட்டாயப்பாட மாக்குவதற்கான சட்ட மசோதாவை வரும் 23 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Dr Ramadass urged the govt to pass to law for implementing Tamil as the medium of instruction and compulsory subject in all classes in school level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X