For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டுக்கு ரூ.10,000.. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும், திமுகவு ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ. 10,000 வரை வாரி இறைக்க முடிவு செய்து அதை பல கட்டங்களாக விநியோகித்து வருகின்றனர். எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பண விநியோகமும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் உச்சகட்டமாக பணம் வழங்குவதில் ஏற்பட்ட மோதலில் திமுகவினர் இருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Ramadoss urges to postpone R.K. Nagar By Poll

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்தொகுதியில் பணம் வெள்ளமாக பாய்கிறது. ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் தினகரன், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர் போட்டிப்போட்டுக் கொண்டு பணம் வழங்குவதாலும், அனைத்து வேட்பாளர்களும் தங்களுக்காக தேர்தல் பணி செய்ய வெளியூரில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை இறக்குமதி செய்திருப்பதாலும் தொகுதியில் எந்நேரமும் வன்முறை வெடிக்கும் நிலை நிலவுகிறது.

அதிமுகவும், திமுகவும் ஆட்சியிலிருந்தபோது ஊழல் செய்து குவித்த பணத்தில் வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற முயல்வார்கள்; அதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்; இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் தான் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை பாமக எடுத்திருந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் பண விநியோகத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியிருந்தது.

ஆனால், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லாததால் தொகுதி முழுவதும் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆர்.கே. நகர் தொகுதி தண்டையார்பேட்டை நேதாஜி நகர் ஐந்தாவது தெருவில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த போது, அப்பகுதி திமுக நிர்வாகிகள் பார்த்தசாரதி, ஷேக் முகமது ஆகியோர் பணம் வழங்குவதை தடுக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து ஏற்பட்ட மோதலில் திமுகவினர் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டதுடன், கத்தியாலும் குத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியில் இதற்கு முன்பும் பல இடங்களில் மோதல்கள் நடந்துள்ளன. ஆளுங்கட்சி மிரட்டல் காரணமாக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தினகரன் வருகையையொட்டி தொப்பி சின்னத்தை கோலமாக வரைய முயன்றதற்காக அவரது ஆதரவாளர் குடும்பத்தின் மீது பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொகுதி முழுவதும் இத்தகைய வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இடைத்தேர்தல் வெற்றி மிகவும் முக்கியம் என்பதால், அதற்காக எந்த விலையையும் கொடுக்க அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் தயாராக உள்ளன. மூன்று தரப்பினரும் ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ. 10,000 வரை வாரி இறைக்க முடிவு செய்து அதை பல கட்டங்களாக விநியோகித்து வருகின்றனர். அதுதான் மோதலுக்கு காரணமாகும். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், இனி வரும் நாட்களில் பண விநியோகம் தீவிரமடைவதுடன், வன்முறைகளும் அதிகரிக்கும். களத்தில் உள்ள முன்னணி வேட்பாளர்கள் அனைவரும் பணம் விநியோகித்து வரும் நிலையில், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அதைவிட 100 மடங்கு அதிக காரணங்கள் ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு உள்ளன. உலகத் தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த இடைத்தேர்தலில் மட்டும் ரூ.600 கோடி பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வரலாறு காணாத அளவில் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும். இப்படுகொலையை இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது.

எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒத்தி வைக்க வேண்டும். இதுவரை பண விநியோகம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட தாக்கம் நீங்கிய பிறகு, முழுக்க முழுக்க வெளிமாநில அதிகாரிகள், மத்தியப் படைகளைக் கொண்டு நேர்மையான, சுதந்திரமான முறையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss urges to postpone R.K. Nagar By Poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X