தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த சதானந்த கவுடா: ராமதாஸ், விஜயகாந்த்
சென்னை: ரயில்வே பட்ஜெட் மூலம் தமிழக மக்களுக்கு அமைச்சர் சதானந்த கவுடா மிகப்பெரிய ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்துக்கூறியுள்னர்.
ரயில்வே பட்ஜெட் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்றத்தில் 2014 -15 ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், அதிக தொடர்வண்டிகளும் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்திருக்கிறார் தொடர்வண்டி அமைச்சர் சதானந்த கவுடா.

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிக தொடர்வண்டிகளை இயக்க வேண்டும்; மதுரை -கன்னியாகுமரி இடையே இரட்டைப் பாதை அமைக்க வேண்டும்; மொரப்பூர் வரை உள்ள பாதையை தருமபுரி வரை நீட்டிக்க வேண்டும்; சென்னை-புதுச்சேரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, திண்டிவனம் -நகரி ஆகிய நகரங்களுக்கிடையே புதிய பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழகத்திற்கான திட்டங்களை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் பா.ம.க இளைஞரணித் தலைவரும், தருமபுரி லோக்சபா உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு நேரில் வலியுறுத்தியும் அவை பற்றிய அறிவிப்பு ஒன்று கூட இடம்பெறாதது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாகவே தொடர்வண்டித்துறை திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய தொடர்வண்டிகளையும், திட்டங்களையும் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, தொடர்வண்டி நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவாவது தொடர்வண்டித் திட்டங்கள் தொடர்பான தமிழகத்தின் கோரிக்கைகளை அமைச்சர் சதானந்த கவுடா நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
விஜயகாந்த் அறிக்கை
புதியதாக பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதாலும், ரயில் போக்குவரத்து என்பது பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் பின்தங்கிய பெரும்பான்மையான மக்களுக்கு பயன்படக்கூடிய ஒன்று என்பதாலும் மக்களிடையே நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு ரயில்வே துறையை மேம்படுத்துவதோடு, ரயிலில் மக்களுக்கான சேவைகளையும் மேம்படுத்தி தரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாப்புக்கு முன்னுரிமை
அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வண்ணம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்தா கவுடா இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், இந்திய ரயில்வே துறை உலகிலேயே சரக்கு போக்குவரத்தில் முதலிடத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு ரயில்வே மகளிர் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், அறிவித்துள்ளார்.
சுகமான பயணம்
இந்தியாவில் பொதுவாக ரயில் பயணம் என்றாலே, உடைந்த இருக்கைகளும், சுத்தம் செய்யப்படாத ரயில் பெட்டிகளும், உபயோகிக்க முடியாத கழிவறைகளும், துர்நாற்றம் நிறைந்த ரயில் நிலையங்களும் என்று இருக்கிற இன்றைய நிலையை மாற்றி, சுகமான ரயில் பயணமாக மாற்றுவதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் முனைந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த திட்டங்கள் நிறைவேறி, மக்கள் எதிர்பார்க்கும் ரயில் பயணம் அவர்களுக்கு சுகமாக அமைந்திட வாழ்த்துவதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications