மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விருது... காரைக்குடி பள்ளியில் சிறப்பு
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் நான்காம் ஆண்டு விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் நான்காம் ஆண்டு விருது வழங்கும் விழா 21ஆம் தேதியன்று L.C.T.L.பழனியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெ. ஆஞ்சலோ இருதயசாமி தலைமையேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சுப்பையா மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். இராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திரு. மாரிமுத்து அவர்கள், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் திருமதி. ஏ. சுந்தரம்பாள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர். சாமி. சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்கள். தலைமையாசிரியர் திரு.ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

வாழ்த்திய சிறப்பு அழைப்பாளர்கள்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் கே. மகேந்திரன் அவர்கள், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கே. திராவிட செல்வம் , சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜி. பரமதயாளன் , காரைக்குடி சகாய மாதா சர்ச் பங்குதந்தை ஜி. வின்சென்ட், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சந்திர மோகன், காரைக்குடி ரோட்டரி கிளப் பேர்ல் சங்கம் தலைவர் என். நாச்சியப்பன், காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவர் சாமி.திராவிடமணி, உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் வழங்கினர்.

ஆசிரியர்களுக்கு விருது
விழாவில் 2016 -17ம் கல்வியாண்டில் SSLC அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள், சமூகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், SSLC அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு விருது, வகுப்பில் சிறந்த மாணவர்கள், 100 % வருகை விருது, தேசிய வருவாய்வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த வகுப்புக்கு விருது
சிறந்த வகுப்பிற்கு விருது, சிறந்த கிளப்பிற்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் பரதம், வண்ணத்துப்பூச்சி நடனம், நகைச்சுவை நாடகம், ஆங்கில நாடகம், மிமிக்ரி போன்ற மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களே நிகழ்சிகளை தொகுத்து வழங்கினர்.

தலைமையாசிரியர்கள் வாழ்த்து
இவ்விழாவில் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், காரைக்குடி ரோட்டரி கிளப் பேர்ல் சங்கமம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெற்றோர்கள், மற்றும் காரைக்குடி வாழ் பொது மக்கள் ஆகியோர் திரளாக வருகை தந்து விழாவை கண்டு களித்தனர்.

விருது விழாவிற்கு ஏற்பாடு
பட்டதாரி ஆசிரியர் திரு. சரவணன் நன்றியுரை கூறினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் திருமதி. விஜயலட்சுமி , திருமதி. கோமதி , திரு. முத்துவேல்ராஜன் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி கோமதி ஜெயம் , திருமதி. கீதா சுந்தரேஸ்வரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.


Click it and Unblock the Notifications
