ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுவது எப்போது ? ஹைகோர்ட் அனுமதிக்காக காத்திருப்பு
சென்னை: புழல் சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தடைவிதித்ததை அடுத்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மற்றும் டாக்டர்கள் குழுவினர் 6 மணி நேரம் காத்திருந்து பின்னர் திரும்பிச் சென்றனர்.
ஞாயிறன்று மரணமடைந்த ராம்குமாரின் உடல் கடந்த இரண்டு தினங்களாக ராயப்பேட்டை பிணவறையில் பிரேதபரிசோதனைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ராம்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று பெற்றோரும், அரசியல் கட்சித்தலைவர்களும் கூறி வருவதால், பிரேத பரிசோதனை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ராம்குமார் மரணம்
பெண் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், 18ம்தேதி மாலை மின்வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தரப்பு கூறுகிறது. அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
பிரேத பரிசோதனை
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. பெற்றோர் வராததால் திங்கட்கிழமை பிரேத பரிசோதனை செய்ய குற்றவியர் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி அனுமதிக்கவில்லை. இதனால் செவ்வாய்கிழமையன்று ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக மருத்துவமனை அருகே பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டனர்.
காத்திருந்த குழுவினர்
பிரேத பரிசோதனைக்காக மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட குழுவை சேர்ந்த டாக்டர் எஸ்.செல்வகுமார், டாக்டர் மணிகண்ட ராஜா, டாக்டர் கே.வி.வினோத், டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் நேற்று காலையிலேயே மருத்துவமனைக்கு வந்தனர். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய 2 வீடியோ கேமராமேன்களும் தயாராக இருந்தனர்.
2வது முறையாக தடை
பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பில் தனியார் மருத்துவர் ஒருவர் இருக்கவேண்டும் என்று ராம்குமார் குடும்பத்தினர் சார்பில் செவ்வாய்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று பிற்பகல் வரை நீடித்தது. இதனால் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி மற்றும் டாக்டர் குழுவினர் உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தனர். ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய மீண்டும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
அனுமதிக்காக காத்திருப்பு
இதையடுத்து சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த குற்றவியர் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி மற்றும் மருத்துவர்கள் குழுவினர் பிற்பகல் 4 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர். ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஹைகோர்ட் உத்தரவிட்டால் மட்டுமே ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும்.












Click it and Unblock the Notifications