அண்ணா பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் செய்யும் காரியங்களா இவை?

Subscribe to Oneindia Tamil

ஆனால் அண்ணா பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு, இன்றைக்கு தமிழ் நாட்டில் கட்சி நடத்துபவர்கள், ஏதோ ஒரு ஒப்புக்காக அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அல்லாமல், அவர்களுக்கும், அண்ணாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அண்ணாவை அவர்கள் என்னைப் போல இளம் பிராயத்திலே அறிந்தவர்கள் அல்ல; என்னைப் போல அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் அல்ல; அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று நான் நடத்திய ஆட்சியிலே நடந்ததைப் போல, அவர்கள் நடந்து கொண்டதும் இல்லை, இனியும் அவர்கள் நடந்து கொள்ளப் போவதும் இல்லை. உள்ளபடியே அண்ணா பெயரில் அவர்களுக்கு விசுவாசம் இருந்தால், அண்ணா மீது அவர்களுக்கு பற்று, பாசம் இருந்தால் அண்ணா பெயரால், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என்று இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு அரிய கருவூலமாக அந்த நூலகத்தை, இந்தியாவில் மும்பையிலோ அல்லது சிங்கப்பூரிலோ இல்லாத அளவுக்கு ஈடு இணையற்ற ஒரு நூலகத்தை தி.மு. கழக ஆட்சியிலே அமைத்தோம். அந்த நூலகத்தை இன்றைய முதலமைச்சர், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக இடித்துத் தூளாக்கினார்.

karunanidhi

இது அண்ணா பெயரில் உள்ள பற்று, பாசம் என்று யாராவது சொன்னால், சொல்பவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று என்று நாம் கேட்பதைத் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்பதை எண்ணிப் பாருங்கள். அண்ணா பெயரால் அவருடைய கொள்கைகளை, அவருடைய கருத்துகளை, அவருடைய எண்ணங்களைப் பரப்புகின்ற வகையில் செய்யப்படுகின்ற எந்த ஒன்றும் இந்த ஆட்சியிலே இன்றைக்கு இல்லை. அவைகள் எல்லாம் சுக்கு நுhறாக ஆக்கப்பட்டு விட்டன. கேட்டால் இது கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது என்கிறார்கள். ஏன் ஓமந்துhரார் வளாகத்திலே உள்ள தலைமைச் செயலகத்தைப் பூட்டினீர்கள் என்று கேட்டால், அது கருணாநிதி கட்டியது, ஆகவே பூட்டி விட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஞாபகத்திலே வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமை மாநில முதல் அமைச்சர்களுக்கு இல்லாமல் ஒரு காலம் இருந்தது. நான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, அன்றைக்குப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரிடத்திலே வாதாடி, போராடி - ஒரு மாவட்டக் கலெக்டர் கூட சுதந்திர நாளன்று இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுகிறார், ஆனால் ஒரு முதல் அமைச்சருக்கு அந்த உரிமை கிடையாதா என்று கேட்ட போது - நீங்கள் கேட்ட கேள்வி பொருத்தமான கேள்வி தான், சரியான கேள்வி தான், ஏற்கத் தக்க கேள்வி தான் என்று அம்மையார் இந்திரா காந்தி அதை ஒத்துக்கொண்டு, உடனடியாக உத்தரவிட்டார்கள். இனிமேல் அடுத்த ஆண்டு முதல், 1974ஆம் ஆண்டு முதல், தேசிய கொடியை சுதந்திர நாளன்று ஏற்றுகின்ற உரிமை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதிக்கு மாத்திரமல்ல, அவருடைய வேண்டுகோளின்படி, இந்தியாவில் உள்ள எல்லா முதலமைச்சர்களுக்கும் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமையைத் தருகிறேன் என்று அறிவித்தார்கள்.

இன்றைக்கு ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்றால், அது இந்தக் கருணாநிதியால் ஏற்பட்ட விளைவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது கருணாநிதி கட்டிய மருத்துவமனை, கருணாநிதி கட்டிய அலுவலகம், கருணாநிதி கட்டிய பாலம் என்பதற்காக அவைகளையெல்லாம் பயன்படுத்த மாட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதாவுக்கு நான் இதைத் தான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இது கருணாநிதி உரிமை வாங்கிக் கொடுத்த கொடி ஆயிற்றே, அடுத்த ஆண்டு சுதந்திர நாளன்று நான் அதை ஏற்ற மாட்டேன் என்று ஜெயலலிதா சொல்வாரா? ஒருவேளை அந்தச் சுதந்திரக் கொடியை ஏற்றுகின்ற அளவுக்கு, அதுவரையில் ஆட்சி இருக்குமோ என்னமோ என்று உங்களில் யாராவது பதில் சொல்லக் கூடும். ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், ஒரு ஆட்சி செய்த காரியங்களை அடுத்து வருகின்ற ஆட்சி தொடர வேண்டும். அப்படிப்பட்ட தொடர்ச்சி இருந்தால் தான் மக்கள் சுகமாக, நிம்மதியாக, நலமாக வாழ முடியும். அந்த ஆட்சி செய்ததை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றால் என்ன தவறு கண்டாய்? எதற்காக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாய்? அதையாவது சொல்ல வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே ஆறுகளுக்கு பாலம் கட்டப் பட்டது என்றால், அந்தப் பாலங்களிலே பயணம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது என்றால், இது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே கட்டப்பட்ட பாலம்,

இந்தப் பாலத்திலே என்னுடைய கார் போகாது என்று இந்த அம்மையார் கூற முடியுமா? ஒவ்வொரு நாளும் அவருக்கு தமிழகத்திலே, சென்னையிலே அவர்கள் பயணம் செய்கின்ற கார், கோட்டைக்குச் செல்ல வேண்டுமென்றால், அவருடைய கார் எந்த வழியாகச் செல்லுகிறது? கருணாநிதி அமைத்த ராதாகிருஷ்ணன் சாலையிலே மேம்பாலத்தின் வழியாகத் தான் செல்ல வேண்டும். நான் இந்தப் பாலத்திலே போக மாட்டேன் என்று அம்மையார் கூறுவாரா? அது என்ன அவ்வளவு பாவம்? ஓரு ஆட்சி செய்கின்ற நல்ல காரியத்தை அடுத்து வருகின்ற இன்னொரு ஆட்சி, தொடரக் கூடாதா என்ன?

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அப்போது அவர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவருடைய ஆட்சி முடிந்த பிறகு, நான் ஆட்சிக்கு வந்தேன். அப்போது நான், அதே சத்துணவுத் திட்டத்தை நீடித்து, எவ்வளவு பிள்ளைகள் அதற்கு முன்பு சத்துணவு சாப்பிட்டார்களோ, அவ்வளவு குழந்தைகளுக்கும் சத்துணவு அளிக்கின்ற திட்டத்தை நான் தொடர்ந்தேன். இது எம்.ஜி.ஆர். கொண்டு வந்தது, நான் அடுத்த முதலமைச்சர், அதைப் பின் பற்ற மாட்டேன் என்று முட்டாள்தனமாக நான் சொல்லவில்லை. அதைப் போலவே எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டம், அதற்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தின் தொடர்ச்சி தான் என்று தான் அவரும் ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு, அந்தச் சத்துணவுத் திட்டத்தில், மேலும் சத்துள்ள உணவாக அது அமைய வேண்டுமென்பதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும் கழக ஆட்சியிலே முட்டை வழங்கினோம். அது எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், ஆகவே முட்டை கிடையாது என்றோ, அல்லது சத்துணவு திட்டமே கிடையாது என்றோ நாங்கள் சொல்லவும் இல்லை, மூர்க்கத் தனமாக நடந்து கொள்ளவும் இல்லை.

நல்ல காரியங்களை ஒரு ஆட்சி செய்தால், அது மக்களுக்காகச் செய்யப்பட்டால், அடுத்து வருகின்ற ஆட்சி அந்தக் காரியங்களைத் தொடர வேண்டுமே அல்லாமல், அது முந்தைய ஆட்சி கொண்டு வந்தது, இந்த ஆட்சியில் அதைத் தொடர மாட்டோம் என்று சொன்னால், அது ஜனநாயகம் ஆகாது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+