For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

75 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரன் இந்த கருணாநிதி

By Mathi
|

ஆகவே நாங்கள் தமிழ் நாட்டு மக்கள் என்று கூறுகின்ற காரணத்தால் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று கூறிக் கொள்ள விரும்புபவர்கள் அல்ல! இந்தியாவிலே திராவிடம், திராவிடத்திலே தமிழகம். அந்தத் தமிழகத்தினுடைய மக்களிடத்திலே தமிழ் உணர்வு. அந்த உணர்வு இருக்கின்ற காரணத்தினால் தான், ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே" என்று பாடி, கட்டாய இந்தியை அன்றைக்கு விரட்டினோம்.

என்னைப் பொறுத்த வரையில் 1938 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றாத அந்தக் காலத்தில் நான் பெரியார் தலைமையில், அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் இந்தி எதிர்ப்புத் தொண்டனாக வாழ்ந்தவன். இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமியர்களுடைய மாநாடு, கான்பகதூர் கலிபுல்லா சாகிப் அவர்கள் தலைமையில் திருவாரூரில் நடைபெற்ற போது அந்த மாநாட்டின் தொண்டர் படைத் தலைவனாக இருந்தவன் தான் உங்கள் முன்னால் அமர்ந்திருக்கின்ற இந்தக் கருணாநிதி என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

Ready to forgive Congress and support it after polls, Karunanidhi says

அப்படி எல்லா மதங்களையும் எந்தவிதமான வித்தியாசமும், வேறுபாடும் இல்லாமல் நட்புறவோடு அணுகி அவர்களோடு இந்தியாவின் நன்மைக்காக, தமிழகத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பாடுபட்டு வருகிற, அதற்காக தியாகங்களைப் புரிந்து வருகின்ற ஒரு இயக்கத்தின் தலைவன் என்ற முறையில் தான் நான் இன்றைக்கு உங்களை இந்த இடத்தில் சந்திக்கிறேன். இன்று நடைபெறுகின்ற இந்தக் கூட்டம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழக வேட்பாளர்களை, தயாநிதி மாறனையும், டி.கே.எஸ். இளங்கோவனையும், கிரி ராஜனையும் அறிமுகப்படுத்துகின்ற கூட்டம். மூன்று பேரை மட்டும் இந்த இடத்திலே சொல்கின்ற காரணத்தால் மற்றவர்களை யெல்லாம் விட்டு விட்டேன் என்று பொருள் அல்ல.

இந்தத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு அணியின் சார்பில் போட்டியிடுகின்ற நாற்பது பேரையும் அறிமுகப்படுத்துகின்ற கூட்டம் இது. இவர்களை தமிழ்நாட்டு மக்கள் முன்னால் அறிமுகப்படுத்துகின்ற கூட்டம். இழிவுபடுத்தப்பட்டு, எங்கோ ஒரு மூலையில் நிறுத்தப்பட்டிருக்கின்ற இந்தச் சமுதாயத்தின் இழிவுகளைத் துடைத்து, இந்தச் சமுதாயத்தின் மேன்மைகள் உலகம் புகழ, பாராட்டப்படுகின்ற அளவிற்கு, உயர்த்தி வைக்கின்ற ஒரு ஆர்வத்தோடு தான் இன்றைக்கு இந்தக் கூட்டத்தை நாம் இந்த இடத்திலே ஏற்பாடு செய்து உங்களை யெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.

நான் உங்களைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நீங்கள் என்னைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.இந்தச் சந்திப்புக்கு இடையே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை மறந்து விடக் கூடாது.

தமிழகத்தில் 1938ஆம் ஆண்டு நான் அரசியலிலே ஈடுபட்டேன். ஏறத்தாழ 75 ஆண்டுக் காலம் என்னுடைய பொது வாழ்க்கையிலே உருண்டோடி விட்டது. எனக்கு வயது 90 என்று இங்கே குறிப்பிட்டார்கள். தந்தை பெரியார் அவர்கள் 100 ஆண்டைத் தொடுகின்ற அளவுக்கு வாழ்ந்தார்கள். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் முதிர்ந்த வயதிலும் வாழ்ந்து, சிறுபான்மை சமுதாயத்திற்காக, இஸ்லாமிய சமுதாயத்திற்காகப் பாடுபட்டார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களை அவருடைய அறுபதாம் ஆண்டு நிறைவடை வதற்குள்ளாகவே நாம் இழந்து விட்டோம். அண்ணா அவர்களை இழந்தாலும், அண்ணா நமக்குப் போதித்த கருத்துகளை, எடுத்துச் சொன்ன கொள்கைகளை, இலட்சியங்களை எல்லாம் விட்டு விடவில்லை. சில பேர் அண்ணா என்ற பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டார்கள்.

என்ன வித்தியாசம் என்றால், நாம் அண்ணாவின் பெயரையும் வைத்துக் கொண்டோம், பெயரையும் நினைத்துக் கொண்டோம், அண்ணாவின் கொள்கைகளையும் மறவாமல் இருக்கிறோம்.

English summary
The strained relations between the DMK and the Congress took a new twist on Wednesday, with DMK chief M Karunanidhi asserting that he would forgive and support Congress, if the latter sought to form a secular government after the elections. "I can say with hope that if tomorrow Congress repents and come forward to say that they return to secular path and not support communal forces, the DMK will forgive and support them," Karunanidhi said while kickstarting election campaign for his grandnephew and former Union minister Dayanidhi Maran (Central Chennai) and other candidates, T K S Elangovan (South Chennai) and Girirajan (North Chennai).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X