1 ரூபாய் சம்பளத்தில் பல்லாயிரம் கோடி சொத்துகளை வாங்கிக் குவித்த ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஒன்றை மாத்திரம் இந்தக் கூட்டத்தில் சொல்ல விரும்புகிறேன். எந்தக் காரியமானாலும், அவைகளை வெளியிடுவதற்கான பத்திரிகைகள் மிக மிகக் குறைவு. ஒரு முரசொலி, ஒரு விடுதலை, ஒரு தினகரன் என்ற இந்த ஏடுகளைத் தவிர, நாளேடுகள் எதுவும் கிடையாது. இருக்கின்ற ஏடுகள் எல்லாம், எங்கள் செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்ற ஏடுகளாகத் தான் இருக்கின்றன என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய செய்தி. சாதாரணமானதல்ல. ஊரெல்லாம் போய் இந்த அம்மையார், என்னைப் போல உத்தமியே கிடையாது, நான் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவள் என்று மார் தட்டிக் கொள்கிறாரே, இந்த அம்மையாருக்கு ஒரு ரூபாய் சம்பளம் என்று ஏட்டிலே எழுதினாலும் கூட, அவர் குவித்து வைத்திருக்கும் செல்வம் எவ்வளவு? சொத்து எவ்வளவு? அந்தத் தொகையைக் கணக்கிட்டால், அந்தத் தொகை எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தால், ஏ, அப்பா! ஒரு முதலமைச்சருடைய சொத்தா இவ்வளவு என்று நினைக்கத் தோன்றும்.

உங்களுக்கு ஒரு புள்ளி விவரம் மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். நான் மக்களுக்காகப் பாடுபடுகிறேன் என்று ஊரெல்லாம் சென்று புலம்பித் தீர்க்கிறாரே, பெங்களூர் நீதி மன்றத்தில் இந்த அம்மையார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

jayalalitha

அந்த வழக்கின் விவரம் என்ன? அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இந்த அம்மையாருக்கு எதிராக வாதாட அரசினால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பவானி சிங். அவர் நீதி மன்றத்தாலேயே கண்டிக்கப்பட்டு, இதற்கு மேல் நீங்கள் தொடர்ந்து தவறு செய்தால் உங்களுக்கு அபராதம் விதிப்போம் என்று கூறி, 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மறுநாளும் அரசு வழக்கறிஞர் வாதாடா விட்டால், தனக்கு அன்றைக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற நிலைமையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் வழக்கு விசாரணையை நடத்தத் தொடங்கிய போது என்ன சொன்னார் தெரியுமா? உண்மைகளை யெல்லாம் போட்டு உடைத்தார். ஆயிரம், இரண்டாயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று நிலபுலங்களை, ஏக்கராக்களை, தோட்டம்துரவுகளை தவறான வழியில் சேர்த்துக் குவித்து வைத்திருக்கின்ற செயலுக்குப் பெயர் தான் சொத்துக் குவிப்பு. ஒரு ரூபாய் தான் ஊதியம் பெறுவதாகச் சொன்ன இந்த மகராசிக்கு எவ்வளவு சொத்து என்ற கணக்கை எல்லாம் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா தரப்பு சொத்து விவரங்களை பெங்களூரு நீதி மன்றத்திலே படித்துக் காட்டியிருக்கிறார்.

சென்னை அருகே ஜெயலலிதாவுக்கு வாலாஜாபாத்தில் 600 ஏக்கர் நிலம்.

சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா - சின்னக் குடிசை, பாவம்

நீலாங்கரையில் ஜெயலலிதாவுக்கு இரண்டு ஏக்கர்.

கொடநாட்டில் - பிரசித்தி பெற்ற கொடநாடு - அடிக்கடி நீங்கள் கேள்விப்படுகிற கொடநாட்டில் 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களாக்கள் (அந்தப் பகுதியிலே ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்பு. இதுவே நான்காயிரம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேசமான மதிப்பு தான் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்)

காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர் - அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில், அ.தி.மு.க. தலைவிக்கு 200 ஏக்கர் தான்.

கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர். (எங்கே? இமயம் முதல் குமரி வரை என்பார்களே, அது மாதிரி குமரியிலே 1,190 ஏக்கர்)

துhத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர். (வைகுண்டத்தை விட்டு வைப்பார்களா?)

ரெவரே அக்ரோ பார்ம் பெயரிலே 100 ஏக்கர்.

30 வண்ணங்களில் பலவிதமான கார்கள், டிரக்கர்கள்

ஐதராபாத்தில் திராட்சை தோட்டம்.

மக்கள் தந்த பதவியைப் பயன்படுத்தி, இத்தனை சொத்துக்களுக்கும் அதிபதியாகியுள்ள ஜெயலலிதா தான், ஏதோ புனிதவதி போலவும், ஒன்றுமில்லாத ஏழை போலவும், ஊழல் என்றால் என்னவென்று தெரியாத பச்சைக் குழந்தை போலவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இது என்ன வேடம்? இது என்ன மாய் மாலம்? இது என்ன மோசடி? இந்தப் பட்டியலை பத்திரிகையாளர்கள் தவறாமல் குறித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நம்மூர் பத்திரிகையாளர்கள் குறித்துக் கொள்ள மாட்டார்கள். அந்த அளவிற்கு பத்திரிகாதர்மம் தெரிந்தவர்கள்!

இவைகள் எல்லாம் பத்திரிகைகளிலே வர வேண்டுமென்றால், முரசொலி, தினகரன், தமிழ் முரசு, விடுதலை போன்ற இந்த ஏடுகளில் தான் வெளிவரும். மற்ற ஏடுகளில் வராது.

பத்திரிகை நண்பர்கள் இந்தப் பட்டியலைக் காட்டச் சொல்லி புகைப்படும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாளைக்குக் காலையில் ஒருசில பத்திரிகைகளைப் பிரித்துப் பார்த்தால், நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். யாரும் வெளியிட மாட்டார்கள்.

அவ்வளவு கண்டிப்பான உத்தரவு. அவ்வளவு மோசமான தண்டனை விதிப்பதற்கு ஒரு இலாக்காவே இன்றைக்கு தமிழ்நாட்டிலே, இந்த ஆட்சியிலே அமைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் எந்த அளவிற்கு மறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு மறைத்து இவ்வளவு நிலங்கள், இவ்வளவு சொத்துக்கள் ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கி குவித்த ஒரு அம்மையார் தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிறார் என்றால் இதை நாளைக்கு வெளியிடுவதற்கு எந்தப் பத்திரிகையாவது, துணிச்சலோடு வெளியிடும் என்றால், நான் அந்த பத்திரிகைகாரர்களுக்கு என்னுடைய வணக்கத்தை முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன். வெளியிடமாட்டார்கள்; ஏன் என்றால், அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. இதையெல்லாம் வெளியிட்டால், நாளைக்கு பத்திரிகையையே மூடி விடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+