ஆர்.கே.நகரில் 'சித்திரைத் திருவிழா'.. காலையிலிலிருந்தே மொய்த்தெடுக்கும் பெண்கள் கூட்டம்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஆண்கள் கூட்டம் போலவே வாக்குச்சாவடிகளில் பெண்களின் கூட்டமும் அலைமோதியது.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேர்தலாகவே மாறிப் போனது. இந்திய வரலாற்றிலேயே பணப்பட்டுவாடாவில் சாதனை படைத்த தொகுதி என்ற கரையை சுமந்து நிற்கிறது ஆர்கே நகர் தொகுதி. கடந்த முறை ஆவணங்கள் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த முறை ரொக்கம், பரிசுப் பொருட்கள், பேடிஎம் டெபாசிட் என்று பல முறைகளில் சுமார் ரூ.120 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்திருந்தனர். ஆதாரத்துடன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டு.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் ஆர்கே நரில் உள்ள 258 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவானது நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆணையம் செய்திருந்த நிலையில், காலை 7.30 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வழக்கமாக காலை நேரத்தில் ஆண்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும், அலுவலகம் செல்லும் ஆண்கள் பணிக்கு செல்வதற்கு முன்னர் வாக்களித்து விட்டு செல்வர்.
ஆனால் காலையிலேயே ஆண்கள் கூட்டத்திற்கு நிகராக ஆர்கே நகரில் பெண்கள் கூட்டமும் இருந்தது.
கோவிலில் சாமி தரிசனம் செய்யச் செல்வது போல வரிசையில் மக்கள் கையில் வாக்காளிப்பதற்கான ஆவணங்களை வைத்துக் கொண்டு காத்திருந்தனர். இதனால் ஆர்கே நகர் தேர்தல் திருவிழா களை கட்டியது. மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தததால் காலை நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதமானது அதிக அளவில் இருந்தது.












Click it and Unblock the Notifications