கெஞ்சி கதறி அழுத ராணுவ வீரரின் மனைவி.. திருமங்கலத்தில் வீடு புகுந்து கொள்ளையர்கள் கொலை முயற்சி
மதுரை: பட்டப்பகலில் வீடு புகுந்து ராணுவ வீரரின் மனைவியிடம் 50 பவுன் நகையை பறித்துவிட்டு அந்த பெண்ணை கொள்ளையர்கள் கொல்ல முயன்ற சம்பவம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவ வீரரின் மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயன்றபோது, அவர் கதறி அழுது உயிர்தப்பி இருக்கிறார். என்ன நடந்தது என்பதையும் பார்ப்போம்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா குராயூர் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதாகும் அய்யனார், ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.ஜம்மு காஷ்மீரில் தற்போது பணியில் உள்ளார்.

வேலைக்கு போனார்கள்
இவருடைய மனைவி கவுசல்யா வயது 28. பி.ஏ. பட்டதாரி. அய்யனார் கவுசல்யா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மகன்கள் 2 பேரையும் வியாழக்கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். அவருடைய மாமனார் குருசாமி, மாமியார் பாண்டியம்மாள் ஆகிய இருவரும் வேலைக்கு போய் விட்டார்கள். கவுசல்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

கொள்ளையர்கள்
இந்நிலையில் வீட்டில் இந்த நேரம் போனால் கவுசல்யா மட்டுமே இருப்பார் என்பதை அறிந்த இரண்டு கொள்ளையர்கள் நோட்டமிட்டு அறிந்துள்னர். அதன்படியே வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கவுசல்யா வீட்டு கதவை தட்டினர். கவுசல்யா ஜன்னல் வழியாக திறந்து யார்? என்று விவரம் கேட்டிருக்கிறார்.

கழுத்தில் கத்தி
அப்போது, ஒரு கொள்ளையன் உங்களது மாமனார் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக பதற்றத்துடன் கூறியிருக்கிறார் அத்துடன் அவர்கள் கொண்டு வந்த போனை கொடுத்து பேச சொல்லி உள்ளனர். இதனை நம்பிய கவுசல்யா வீட்டைத் திறந்திருக்கிறார். உடனடியாக 2 பேரும் கவுசல்யாவின் வாயை பொத்தி அவர்கள் வைத்திருந்த கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி இருக்கிறார்களாம்.

மிரட்டி சாவி
கவுசல்யா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலி, 2 மோதிரங்களை பறித்துள்ளார்கள். மேலும் வீட்டு பீரோவில் உள்ள நகையை எடுக்குமாறு கொள்ளையர்கள் மிரட்டியுள்ளார்கள். அதற்கு கவுசல்யா வீட்டில் உள்ள நகைகள் அனைத்தும் வங்கியில் அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரை மிரட்டி சாவியை வாங்கி பீரோவில் இருந்த 40 பவுன் நகையை எடுத்திருக்கிறார்கள்.

கயிற்றில் கட்டினர்
பின்னர், கவுசல்யாவை கத்தியால் குத்தி கொன்று விடலாம் என 2 கொள்ளையர்கள் பேசி உள்ளனர். அதற்கு கவுசல்யா கதறி அழுது எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என்னை உயிரோடு விட்டு விடுங்கள் என கெஞ்சியுள்ளார். இதனைத் தொடர்ந்து கவுசல்யாவின் கைகளை கயிற்றால் கட்டி வீட்டிற்குள் போட்டு பூட்டி வெளியே சென்றனர்.

திருமங்கலம்
தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற போது, கையில் கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு கவுசல்யா வெளியே ஓடிவந்து கூச்சல் போட்டுள்ளார். கிராமத்தில் இருந்த உறவினர்கள் சத்தம் கேட்டு கொள்ளையர்களை விரட்டி சென்றனர். அதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.இது குறித்து கவுசல்யா கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 50 பவுன் நகைகளுடன் தப்பிய 2 கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications