
வங்கியில் பணம் இல்லாதவர்களுக்கு ரூ.10,000 செலுத்துகிறார் மோடி.. தேனியில் பரபரப்பை ஏற்படுத்திய வதந்தி
தேனி: செல்லாத ரூபாய் நோட்டு பிரச்சனை பெரும் தலைவலியாக மக்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது. இந்த நேரத்தில் வதந்தியை கிளம்பி மக்களை குழப்பி வருகின்றனர் சில சமூக விரோதிகள். பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருப்பு தொகை எதுவும் இல்லை என்றால் அந்தக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகையாக பிரதமர் மோடி செலுத்துகிறார் என்ற வதந்தி தேனியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. அதற்காக மக்கள் தங்களது ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டைகளையும் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து பதிவு செய்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், யாரோ சில சமூக விரோதிகள், வங்கிக் கணக்கில் பணமே இல்லாதவர்களுக்கு பிரதமர் மோடி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்துகிறார் என்ற வதந்தியை கிளம்பிவிட்டுள்ளனர். இந்த வதந்தி காட்டுத் தீ போல தேனி, அல்லி நகரம் உள்ளிட்ட சுற்றுப்பட்டு பகுதிகளுக்கு பரவியது. இதனை உண்மை என்று நம்பி ஏராளமான பெண்கள் நகராட்சி அலுவலகம் நோக்கி படை எடுத்தனர்.
இதனையடுத்து, இது வதந்தி என்றும் மோடி அப்படி ஒன்றும் அறிவிக்கவில்லை என்றும் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் தெரிவித்தது. ஆனாலும், பொதுமக்கள் நம்பத் தயாராக இல்லை. தங்களுடைய ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளுடன் நீண்ட நேரம் நகராட்சி வாசலிலேயே காத்துக் கிடந்தனர். 10 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்துவது என்ற தகவல் வெறும் வதந்தித்தான் என்பது நேரம் ஆக, ஆக மக்களுக்கு புரியத் தொடங்கியது. பின்னர், அங்கிருந்து ஒவ்வொருவராக ஏமாற்றத்துடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.