ஸ்ரீரங்கத்தில் இதுவரை ரூ. 47 லட்சம் பணம் பறிமுதல்... தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதியில் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனைகளில், முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு வேட்பாளர்களும், கட்சியினரும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. முறையான ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொடு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகளால் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக நடைபெறுகின்றன. நேர்மையான தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.
நிலுவையில் உள்ள பிடிவாரண்டு குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். சமூக விரோதிகள், பழைய குற்றவாளிகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, குற்றச்செயலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதி வாங்க ஆணையிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக மது சப்ளை செய்வது, சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டு செல்வது போன்றவற்றை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ.47 லட்சம் சிக்கியது:
வாகன சோதனையில் இரண்டு நிகழ்வுகளில் மொத்தம் ரூ.47 லட்சம் சிக்கியுள்ளது. இதன் உரிமையாளர் யார்? எதற்காக அந்த பணம் எடுத்துச்செல்லப்பட்டது என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சரியான காரணத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்றால் உரியவரிடம் கொடுத்து விடுவோம்.
ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு எதையாவது கொடுப்பதாக தெரிந்தால், அதுபற்றி உடனே தகவல் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இந்த குற்றத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுக்காக எதையும் பெறாமல் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். 2 அல்லது 3 நாட்களில் ஸ்ரீரங்கம் சென்று, வேட்பாளர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து பேசுவேன்.
650 ராணுவ வீரர்கள்
10 கம்பெனி (சுமார் 650 வீரர்கள்) துணை ராணுவத்தினர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவர். அதிரடிப்படை, நடமாடும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பும் போடப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு வெப்காம் மூலம் கண்காணிக்கப்படும். அதோடு வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
11-ந் தேதி மாலை 5 மணியில் இருந்து 13-ந் தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான துண்டு சீட்டை வழங்கும் எந்திரம் வைக்கப்படுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
தி.மு.க.வுக்கு பதில்
போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தி.மு.க. கொடுத்த புகாருக்கு இந்திய தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது. தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், புகாரில் குறிப்பிடப்பட்ட 3,645 பேரில் 1,239 வாக்காளர்களின் பெயரை ஏற்கனவே நடந்த சரிபார்த்தல் பணியின்போது நீக்கிவிட்டோம். மீதமுள்ள பெயர்களை சரிபார்த்து வருகிறோம். ஏ.எஸ்.டி. பட்டியல் 48 மணிநேரம் முன்னதாக தயாரிக்கப்பட்டு வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் இருக்கும். எனவே வாக்காளர் அல்லாதோர் ஓட்டுப்போட முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications