For Daily Alerts
பண ஆசையே 94 குழந்தைகளின் உயிரைக் குடித்துள்ளது.... நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையில் தகவல்!
கும்பகோணம்: கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் நாள் கும்பகோணம் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர்.
நாட்டையே உலுக்கிய இந்தக் கோரச்சம்பவம் குறித்து நீதிபதி சம்பத் தலைமையில் 4 பேர் கொண்ட குழு ஒன்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், தீக்கிரையான பள்ளியின் நிர்வாகம் மீதும் பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப் பட்டது. மேலும், இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க சில பரிந்துரைகளையும் அந்த கமிஷன் அளித்தது.

மேலும், இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-
- பள்ளி நிர்வாகம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளது.
- விதிகளை அப்பட்டமாக மீறி ஒரே கட்டடத்தில் மூன்று பள்ளிகள் இயங்கியதும், கூரைக் கொட்டகையில் பள்ளியை நடத்தியதும் விபத்திற்கு காரணம்.
- கவனக்குறைவாக இருந்த மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் ஆகியோர் தீ விபத்து நிகழ்வதற்கு பொறுப்பானவர்கள்.
- தீவிபத்து ஏற்பட்டவுடன் மாணவர்களை காப்பாற்றாமல் ஆசிரியர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
- ஆசிரியர்களுக்கு பேரிடர் கால நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- உணவு சமைக்கும் கூடங்கள் பள்ளி வளாகத்திற்குள் இருக்கக்கூடாது.
- ஒரு வகுப்பறையில் 20 குழந்தைகள்தான் அமர்த்தப்பட வேண்டும்.
- பள்ளிகளுக்கு திடீரெனச் சென்று ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
- நர்சரி பள்ளிகள் பெருகி வருவதால் அதற்கென தனி இயக்குநரகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.