சசிகலா புஷ்பாவினால் விழுந்ததா அடுத்த விக்கெட்? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் பதவி பறிப்பு?
சென்னை: போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பதவி பறிக்கப்பட்டு விட்டதாகவும்
அவருக்கு பதிலாக கார்த்திகேயன் என்பவரை நியமித்துவிட்டார்கள் என்றும் தகவல் வெளியானது. ஆனால் சாதாரண விடுமுறைதான், அவர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டார் என்றும் தற்போது போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில், பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கும் பெருமை பூங்குன்றனுக்கு மட்டுமே உண்டு. அமைச்சர்கள் மீதான புகார்களை தலைமையின் கவனத்திற்கே கொண்டு போகாமல் இருட்டடிப்பு செய்கிறார். நாங்கள் கொடுக்கும் புகார்களை கிடப்பில் போட்டுவிடுகிறார் என்ற ஆதங்கம் தொண்டர்கள் மத்தியில் உண்டு.
சசிகலா புஷ்பா விவகாரம் இந்தளவுக்குப் பேசப்படுவதற்கு அவர்தான் காரணம். தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கையாண்டிருந்தால் விவகாரம் இந்தளவுக்கு வந்திருக்காது என்ற பேச்சு தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் கோபத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
பூங்குன்றனின் அப்பா, சசிகலாவுக்கு ஆசிரியராக இருந்தவர். தொடக்க காலத்தில் இருந்தே அவர்களது குடும்பத்தின் மீது சசிகலாவுக்கு பாசம் உண்டு. அந்த அடிப்படையில்தான் போயஸ் கார்டனுக்குள் பூங்குன்றனை கொண்டு வந்தார். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்து வருகிறார் பூங்குன்றன்.
நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் நிர்வாக பொறுப்பு முதல் அனைத்துப் பணிகளையும் அவர்தான் கவனிக்கிறார். மாவட்டங்களில் உள்ள கட்சித் தலைமை அலுவலகக் கட்டடங்களே, பூங்குன்றனின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.
போயஸ் கார்டனில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், பூங்குன்றனைத் தாண்டிச் செல்லாது என்பது கட்சிக்காரர்கள் அனைவருக்கும் தெரியும். அவரது விசுவாசத்தில் முழு நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வளவு பணிகளையும் ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதாவிடம் நேரடியாகப் பேசக் கூடியவர். கார்டனுக்கு வரும் புகார்களை ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டு சேர்க்கும் பணி ஆகியவை பூங்குன்றன் வசம் இருந்தது. ஆனால் இவர் கடந்த சில நாட்களாக மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்களை முறையாகக் கொண்டு சேர்க்கவில்லை என்றும், சசிகலா புஷ்பா விவகாரத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இவருடைய விக்கெட்டும் அதிமுகவில் விழுந்துவிட்டதாக பேசப்பட்டது.
கடந்த வாரம் அவரை விடுமுறையில் போக சொல்லிவிட்டார்களாம். அதன்பிறகு கார்டன் பக்கம் அவர் தலை தெரியவில்லை என்றும் புதிதாக ஒருவரை நியமித்து விட்டார்கள் என்றும் பேசப்பட்டது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுமுறையில் பூங்குன்றன் போக அதுவே அவருக்கு கல்தா கொடுத்துவிட்டார்கள் என பரவியிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
