சசிகலாவால் நிராகரிக்கப்பட்ட ஜெ. அண்ணன் மகள் தீபா.. பயன்படுத்தப்பட்ட அண்ணன் மகன் தீபக்!
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் இருந்தார். அவருக்கு தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். ஜெயலலிதா தீவிர அரசியலுக்கு வரும் முன்பு இவர்கள் தன்பெற்றோருடன் போயஸ் தோட்டத்தில்தான் வசித்தனர்.
சசிகலாவின் ஆதிக்கம் போயஸ் தோட்டத்தில் அதிகரித்த உடன் அண்ணன் குடும்பம் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறினர். ஆனாலும் அண்ணன் குடும்பத்தின் மீது அதீத பாசமாகவே இருந்தார் ஜெயலலிதா.
அண்ணன் மறைவுக்குப் பின்னர் அவர்களின் குடும்பத்தினரையே தூரம் அதிகரித்தது. அண்ணியின் மறைவுக்கு கூட ஜெயலலிதா செல்ல முடியாத அளவிற்கு இடைவெளி விழுந்தது.

ஜெயலலிதா ரத்த சொந்தம்
அண்ணன் மகள் தீபா அவ்வப்போது போயஸ் தோட்டத்திற்கு வந்து அத்தையை சந்திக்க விரும்புவார். ஆனால் அது முடியாமலேயே போனது. ஜெயலலிதா 2014ம் ஆண்டு சிறைக்கு சென்று வந்த போது, போயஸ் தோட்டம் வந்தார் தீபா. வாசலியே தடுத்து நிறுத்தப்பட்டார்.

அண்ணன் மகள் தீபா
அத்தைமடி மெத்தையடி என்று புத்தகம் எழுதி வெளியிட்டவர் தீபா. தான்தான் போயஸ் தோட்டத்து உண்மையான வாரிசு என்று கூறி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதமே போயஸ் தோட்டத்திற்கு யார் வாரிசு என்ற போட்டி ஆரம்பித்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபாவை நெருங்க விடாமல் செய்தார் சசிகலா. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது கூட பலமுறை முயற்சி செய்தார் தீபா. ஆனால் அவரால் அப்பல்லோ கேட்டை கூட தாண்ட முடியவில்லை.

ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை தன் உடன் அருகிலேயே வைத்துக்கொண்டார் சசிகலா. காரணம், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு செய்ய தீபக் வேண்டும் என்பது சசிகலாவிற்கு தெரிந்திருந்தது. தீபாவை போல ஊடக வெளிச்சம் தீபக் மீது பட்டதில்லை.

இறுதிச் சடங்குகள்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் மெரீனா கடற்கரையில் பாரம்பரிய முறைப்படி சசிகலா உடன் இறுதிச்சடங்குகள் செய்த நபர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் அது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் என்பது வெளி உலகினருக்கு தெரியவந்தது.

போயஸ் தோட்டத்து வாரிசு
போயஸ் தோட்டத்து சொத்துக்களுக்கு வாரிசாக வந்து விடுவாரோ என்றுதான் தீபாவை ஒதுக்கினார் சசிகலா, அதே நேரத்தில் இறுதிச்சடங்கு செய்ய மகன் போல ஒரு வாரிசு வேண்டும் என்றுதான் அண்ணன் மகன் தீபக்கை தன் உடனே வைத்துக் கொண்டார் சசிகலா என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

உண்மையான வாரிசு
இந்து சமூகத்தில் இறுதிச்சடங்கு செய்பவர்கள்தான் அவர்களின் உண்மையான வாரிசாக கருதப்படுவார்கள். போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்து மரணத்திற்கு பின் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஜெயலலிதாவின் அருகில் நின்று கொண்டிருந்த சசிகலா, பால் ஊற்றி, வாய்க்கரிசி போட்டு இறுதிச்சடங்கு செய்தார். தான்தான் உண்மையான வாரிசு என்பதை சொல்லாமல் சொன்னார். ஒப்புக்காக உடன் தீபக்கை செய்ய வைத்தார்.

வளர்ப்பு மகன்
இறுதிச்சடங்கின்போதாவது, ஜெயலலிதாவின் ரத்த உறவை அனுமதித்தார்களே என்ற நிம்மதி அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே காணப்பட்டது.
அதே நேரத்தில் இறுதி வரை ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனை அருகில் கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.