For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதிராமங்கலம் கிராம மக்களை சந்திக்க சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது!

கதிராமங்கலம் கிராம மக்களை சந்திக்க சென்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கதிராமங்கலம் கிராம மக்களை சந்திக்க சென்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் இரவு 8 மணியவில் விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அக்கட்சியினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

SDPI workers were arrested yesterday in Kathiramangalam for supporting Villagers

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓ.என்.ஜி.சியின் இந்த எண்ணெய் குழாய் முற்றிலும் பாதுகாப்பானது என்று வருவாய் துறையினர் உறுதியளித்து சென்ற நிலையில் இந்த திடீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் நேரில் வருகை தந்து ஓ.என்.ஜி.சி. அப்பகுதியிலிருந்து அகற்றப்படும் எனவும் மக்களின் உயிருக்கு பாதுக்காப்பு அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் விளை நிலங்களில் புதைத்து வைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் ஏற்கனவே, இத்திட்டத்தை எதிர்த்து வரும் நிலையில், பதற்றம் அடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து எண்ணெய் கசிவை பார்வையிட வந்த அதிகாரிகளை தடுக்க முயன்றபோது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புக்கு தீவைக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கலைக்க பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். காவல்துறையின் இந்த அடக்குமுறையை எஸ்.டி.பி.ஐ. வன்மையாக கண்டிக்கத்ததோடு, நேற்று கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்திக்கவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உட்பட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் கதிராமங்கலம் சென்றனர்.

அப்போது கதிராமங்கலம் கிராமத்திற்குள் செல்ல அனுமதி மறுத்த காவல்துறையின் நடவடிக்கையை மீறி கிராமத்திற்குள் செல்ல முயன்ற போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உட்பட கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார், எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் தஞ்சை முகமது ஃபாரூக், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர், பொதுச் செயலாளர் அன்சாரி, நாகை வடக்கு மாவட்டம் தலைவர் சஃபீக், திருச்சி மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் குலாம் ஹசன், திருச்சி மாவட்ட தலைவர் அமீர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைதுக்கு முன்னதாக கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது; தமிழ்நாட்டின் வேளாண்மைத் தொழிலையே அழித்து பாலைவனமாக்கும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு நயவஞ்சமான முறையில் செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் இயற்கை மற்றும் எரிவாயுக் கழகம், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள குழாய்கள் பதிக்கும் பணியைச் செய்துள்ளது. கதிராமங்கலத்தில் ஏற்கனவே எரிவாயு எடுக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஹைட்ரோ கார்பன் ஆய்வை மேற்கொள்ளும் ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்த வேண்டும் என்று கடந்த மே மாதம் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் அப்போது கூறினர்.

ஆனால் கடந்த ஜூன் 2 ஆம் தேதி காவல்துறையினர் புடைசூழ ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியபோது பொதுமக்களும், தாய்மார்களும் அறப்போராட்டங்களில் இறங்கினர். அப்போது காவல்துறை தடியடி நடத்தி பொதுமக்களை கைது செய்தது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.

தற்போது கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பதித்த குழாய் உடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எரிவாயு என்ற பெயரால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பசுமை வளம் கொழிக்கும் தங்கள் பகுதி விவசாயம் அழிந்து நாசமாகும் என்று பொதுமக்களும், தாய்மார்களும் ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

மண்ணைப் பாதுகாக்கப் போராடும் கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஏழரை கோடி மக்களின் நியாயமான உணர்வுகளை அலட்சியப்படுத்தி, மக்கள் போராட்டத்தை கிள்ளுக் கீரையாகக் கருதி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது.

இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வண்மையாக கண்டிப்பதோடு, எண்ணெய் குழாய் உடைப்பால் 70 ஏக்கர் விளை நிலங்களில் எண்ணெய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே மாநில அரசு உடனடியாக ஓ.என்.ஜி.சியின் ஒப்பந்தம் முடிந்த பிறகும் மறு ஒப்பந்தம் செய்து பதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களில் இருந்து குழாய்களை அகற்ற வேண்டும், எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளை நிலத்தை பாதிப்படைய செய்த நிலத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும், கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் பொதுமக்களையும், விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்து, அந்த கிராமத்தில் முற்றுகையிட்டுள்ள காவல்துறை அனைவரையும் அங்கிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும், அக்கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவதோடு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளால் மக்களின் பாதுகாப்பிற்கும், சுற்றுப் புறச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாதவாறு தடுத்து நிறுத்திட வேண்டும், கதிராமங்கலத்திற்கு சென்ற பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் மீது கடுமையான 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது கடும்
கண்டனத்திற்குரியது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்திட வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கதிராமங்கலம் கிராமத்திலிருந்து காவல்துறையினர் வெளியேறாவிடில் ஜூலை 10ம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. இம்முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் பங்கேற்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிறகு கைது செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கும்பகோணம் ஆடுதுறையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டு இரவு 8 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

English summary
SDPI workers were arrested yesterday in Kathiramangalam for supporting Villagers. They all have been released yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X