பேருந்தில் துண்டுபோட்டு இடம்பிடிக்கும் ஆளாக பாஜக அணியில் சேர வாஞ்சை காட்டிய வைகோ
தமிழகத்தில் எந்தத் தலைவனுக்கும் கிடைக்காத வானளாவிய வரவேற்பும், திகைக்க வைக்கும் பெரும் கூட்டமும் உங்களுக்கு மட்டுமே வாய்த்தது. அண்ணா வழியில் மக்கள் உத்தரவிடும் வரை சமூக இயக்கமாக இருப்போம் என ஆவேசமாய் முழங்கிய நீங்கள், ஆறே மாதத்தில் அ.தி.மு.க&வுடன் கூட்டணி அமைத்தீர்கள்.
மழைகொட்ட வருகிற மேகம் திசைகெட்டுப் போன தவிப்பில், சட்டைப் பையில் இருந்த உங்களை அன்றைக்குத்தான் வேதனையோடு வெளியே எடுத்துப் போட்டோம். ஆனாலும், உங்கள் மீதான அன்பு குறையவில்லை. ‘கருணாநிதியை எதிர்க்கத்தான் அம்மையாரோடு கூட்டணி' என உங்களவர்கள் சொன்ன அரசியல் சாதுர்யத்தையும் சகித்துக் கொண்டோம்.

ஆனால், அடுத்த சில திருப்பங்களில் எந்த கருணாநிதி உங்களைத் துரோகி எனச் சொல்லித் தூக்கி வீசினாரோ...! அவரிடமே போய் நின்றீர்கள். ‘இவர் இல்லை என்றால் எவர்?', ‘இப்போது இல்லை என்றால் எப்போது?' என அண்ணா அறிவாலயத்தில் உணர்வு பீறிடப் பேசினீர்களே அண்ணா...! அப்போது முன் வரிசையில் உட்கார்ந்து உங்களின் மாற்றத்தைப் பார்த்து மனம் பதைத்தவன் நான்.
‘கருணாநிதியை எதிர்த்தவர்களுக்கே எதிர்காலம்' என்கிற வாய்ப்பு எப்படி மரியாதைக்குரிய எம்.ஜி.ஆருக்கு வாய்த்ததோ...! அதே வாய்ப்பைத்தான் வரலாறு உங்களுக்கும் வழங்கியது. ஆனால், அதனைத் தக்கபடி பயன்படுத்த நீங்கள் தவறிவிட்டீர்களே அண்ணா?
உங்களுக்கு எதிரிகள் என்று எவருமே இல்லை. எதிரி யார் எனத் தேடிப் பார்த்தால் நிலைக் கண்ணாடியில் நிச்சயம் நீங்கள்தான் தெரிவீர்கள். ஆமாம், உங்களுக்கு எதிரி நீங்களேதான்!
தேர்தல் நெருங்குகிற நேரத்தில் எல்லாம் நீங்கள் எடுக்கிற நிலைப்பாடு என்றைக்காவது சரியாக இருந்திருக்கிறதா அண்ணா? அ.தி.மு.க.வோடும், தி.மு.க.வோடும் மாறி மாறி கூட்டணி வைத்தும், அவர்கள் அவமானப்படுத்திய சூழலில் தேர்தல் புறக்கணிப்பு செய்தும் கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த நிலைப்பாட்டை நீங்களே நினைத்துப் பாருங்கள்.
பேருந்து கிளம்புவதற்கு முன்னரே துண்டுபோட்டு இடம் பிடிக்கும் ஆளாக இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் நீங்கள் காட்டிய வாஞ்சையும் பேரன்பும் எந்தவிதத்தில் அண்ணா நியாயம்? மதசார்பின்மையை தீர்க்கமான கொள்கையாக மனதுக்குள் வரித்திருக்கும் நீங்களா பாரதிய ஜனதாவுடன் பந்தியில் அமர்ந்தீர்கள்?












Click it and Unblock the Notifications