"இது வெற்று வாக்குறுதி அல்ல.." காரைக்குடியில் சீமான் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஆவேசம்!
காரைக்குடி: நாம் தமிழர் கட்சி சார்பில் காரைக்குடியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திராவிட அரசியலை மிக கடுமையாக விமர்சித்த அவர், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரிக்கை விடுத்தார்..
சட்டமன்றத் தேர்தல் 2026-ன் இறுதிக்கட்டப் பிரச்சாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநிலம் முழுக்க தனி நபராகப் பிரச்சாரம் செய்தார். இதற்கிடையே பிரச்சாரம் முடிய சில மணி நேரமே உள்ள நிலையில், கடைசி நாளான இன்று அவர் காரைக்குடியில் பிரச்சாரம் செய்தார்.

காரைக்குடியில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வழக்கமான ஸ்டைலில் அதிரடியாகப் பேசினார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடிய சீமான், "ஐம்பது ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் தமிழகம் எதைப் பெற்றது? ஊழலையும், மதுவையும் தவிர மக்களுக்கென்று அவர்கள் எதையும் செய்யவில்லை. இலவசங்களை அள்ளி வீசி மக்களைப் பிச்சையெடுக்க வைத்ததுதான் இவர்களின் சாதனை" என ஆவேசமாகப் பேசினார்.
"விவசாயி சின்னம் என்பது வெறும் அடையாளம் அல்ல, அது இந்த மண்ணின் உயிர்நாடி" எனக் குறிப்பிட்ட அவர், நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. விவசாயத்தை அரசுப் பணியாக மாற்றி, விவசாயிகளுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், தரம் வாய்ந்த கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் அனைவருக்கும் இலவசமாகச் சமமாக வழங்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் மதுக்கடைகளுக்குப் பதிலாகப் பால் பண்ணைகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "மாற்றம் என்பது பேச்சில் அல்ல, செயலில் வர வேண்டும். 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல, அது தமிழ் தேசியத்தின் எழுச்சி. நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, நம் மண்ணைக் காக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்" என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications