சிறிசேன இலங்கை திரும்பியதுமே வாலாட்டிய சிங்கள கடற்படை! தமிழக மீனவர் மீது மீண்டும் தாக்குதல்!!
ராமேஸ்வரம்: இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை அதிபர் சிறிசேன நாடு திரும்பிய நிலையில் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை மீண்டும் தாக்கி விரட்டியடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியா வருகை தந்த நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கையில் உள்ள 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுதான் அந்நாடு திரும்பினார்.

இதனிடையே ராமேஸ்வரம், மண்டபம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒருதரப்பினர் கச்சத்தீவு அருகே இன்று வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இங்கு வந்து மீன்பிடிக்க கூடாது. அவ்வாறு மீன்பிடித்தால் கைது செய்வோம் என்று கூறி 10 விசைப்படகுகளில் ஏறி கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர் படகில் இருந்த மீன்பிடி சாதனங்களை கடலில் வீசி எறிந்து விரட்டியடித்தனர். இதனால் உயிருக்கு பயந்துபோன மீனவர்கள் பாதியிலேயே அவசர அவசரமாக கரை திரும்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் தற்போது எங்களை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று கூறி தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
கோடியக்கரையிலும் தாக்கல்
இதனிடையே நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் பல மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன் பிடித்து வருகிறார்கள். தற்போது சீசன் காலம் என்பதால் பலர் தங்கி உள்ளனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தை சேர்ந்த மீனவர்களும் அடங்குவர்.
கோடியக்கரை தென் கிழக்கு பகுதியில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் தூத்துக்குடி மீனவர்கள் பிடித்து வைத்திருந்த சிங்க இறால், நண்டு உள்ளிட்டவைகளை பறித்தனர். பின்னர் வலைகளை அறுத்து சேதப்படுத்தினார்கள். உடனடியாக மீனவர்களை கரைக்கு திரும்புமாறு விரட்டியடித்தனர். மீனவர்களும் அச்சத்துடன் இன்று பகல் கரை திரும்பினார்கள்.












Click it and Unblock the Notifications