வீழ்ந்தார் ரங்கசாமி... 17 இடங்களில் வென்று புதுவையில் ஆட்சியமைக்கும் காங்- திமுக கூட்டணி
புதுவை: புதுவை சட்டசபைத் தேர்தல் முடிவுகளின்படி, அங்கு காங்கிரஸ் -திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் சட்டசபைத் தேர்தல் கடந்த திங்கட்கிழமையன்று நடந்து முடிந்தது. அப்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 930 வாக்குச்சாவடிகளில் இறுதி நிலவரத்தின்படி 84.08 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மொத்தம் உள்ள 9 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 68 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரும் அடங்கும்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ‘வெப்' கேமரா மூலம் கண்காணிப்பும் செய்யப்படுகிறது.
தற்போது அங்கு 30 தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திமுக - காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர சுயேட்சை வேட்பாளரும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம், புதுவையில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications