For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியப்பாவிடம் நற்பெயர் வாங்குவது 200 மடங்கு கடினம்.. ஸ்டாலின் பேச்சு.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: அப்பா கருணாநிதியிடம் நற் பெயர் வாங்குவது 100 மடங்கு கடினம் என்றால் பெரியப்பா க. அன்பழகனிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் பதவியில் அமர்ந்துள்ள மு.க.ஸ்டாலின் இன்று பொதுக்குழுவில் நிகழ்த்திய ஏற்புரையின் முழு விவரம் இதோ:

அன்புள்ள கழகத்தின் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களே, போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கழக பொருளாளர் துரைமுருகன் அவர்களே, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி அவர்களே, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே, வி.பி.துரைசாமி அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி அவர்களே, தலைமைக் கழக நிர்வாகிகளே, மாவட்டக் கழகத்தின் செயலாளர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்களே கழகத்தின் இதயமாக விளங்கிக் கொண்டிருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களே, சிறப்பு அழைப்பாளர்களே,

Stalin pledges to work hard till his last breath

தலைவர் கலைஞர் அவர்களே என்று அழைக்க வேண்டும் என்ற நினைப்போடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறேன்.

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஒரு பேருண்மையைச் சொல்லி என் உரையை தொடங்குகிறேன்.

நான் தலைவர் கலைஞர் இல்லை, அவர் போல் பேசத் தெரியாது, பேசவும் முடியாது. அவரைப் போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவைக் கொண்டவனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். இது பெரியார் - அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக் கூடிய விதை. இன்று நம்மிடத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லை என்றாலும் தலைவரின் கொள்கை தீபம் நம்மிடத்தில் இருக்கிறது. நம்முடைய உயிரும், உயிர் மூச்சும் இருக்கின்ற வரை தொடர்ந்து அது இருந்துகொண்டே இருக்கும்.

தலைவர் கலைஞரின் கொள்கை தீபம் நம் கையில் இருப்பது, முப்படையும் நம் கையில் இருப்பதற்கு சமம். அந்த முப்படை நம்மிடம் இருக்கிறது என்ற தைரியத்தில் துணிச்சலில், இந்த தலைவர் பொறுப்பை உங்கள் அன்போடு, ஆதரவோடு இன்று நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்.

"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்று நான் வாழ்ந்ததாக தலைவர் கலைஞர் அவர்கள் என்னை பாராட்டி எழுதினார்கள். "உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்று எனது பெயருக்கு விளக்கமும் சொல்லி உச்சி முகர்ந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த பாராட்டு வார்த்தைக்கு உதாரணமானவனாக, என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றுதான் நான் வாழ்வேன்.

"என்னை விட கழகம் பெரிது" என்றார் தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய வழியில் நானும் சொல்கிறேன் "என்னை விட கழகம் பெரிது"

திராவிட முன்னேற்றக் கழகம் தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது. உதயசூரியன் சின்னம் தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது. கருப்பு சிவப்பு என்ற அந்த இருவண்ணக் கொடி தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது.

இந்த மேடையில், இந்த கூட்டத்தில் எனக்கு ஒரே ஒரு குறைதான். இந்த காட்சியைப் பார்க்க தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்பதே அந்த குறை. இருந்தாலும், தலைவர் கலைஞர் அவர்கள் இடத்தில் நம்முடைய பேராசிரியர் அவர்கள் இருக்கிறார்கள். வாழும் திராவிடத் தூணாக பேராசிரியர் அவர்கள் இருக்கிறார். "எனக்கு அக்கா உண்டு, அண்ணன் இல்லை, பேராசிரியர் தான் உடன் பிறவா அண்ணன்" என்று பலமுறை கலைஞர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எனக்கு பேராசிரியர் அவர்கள் பெரியப்பா. அப்பா இல்லை என்றாலும் பெரியப்பா இங்கே இருக்கிறார்.

Stalin pledges to work hard till his last breath

அப்பாவுக்கு முன்பே என்னைத் தலைவராக முன்மொழிந்தவர் பெரியப்பா பேராசிரியர் அவர்கள் தான். அப்பாவிடம் நல்ல பேர் வாங்குவது நூறு மடங்கு சிரமம் என்றால், பெரியப்பாவிடம் நல்ல பேர் வாங்குவது இருநூறு மடங்கு சிரமமானது என்பது எனக்கு நன்றாக தெரியும்.

"அடுத்த தலைவர் தலைமைக்கான தகுதி ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது" என்று பேசியவர் பெரியப்பா பேராசிரியர் அவர்கள். அந்த பேராசிரியருக்கு முன்னால் நின்று தலைவராக தேர்வு பெறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

இந்தக் கூட்டத்திற்கு நான் வந்ததும் அரங்கத்துக்குள் இருப்பவர்களின் முகத்தை நான் பார்த்தேன். என்னைப் பள்ளி பிள்ளையாக பார்த்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். கல்லூரி மாணவனாக பார்த்தவர்கள் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள். கழக பேச்சாளராக, இளைஞர் அணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, பொருளாளராக, செயல் தலைவராக என எனது வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர்கள் இங்கு இருக்கிறீர்கள். படிப்படியாக நான் வளர வேண்டும் என்று தான் கலைஞரும் விரும்பினார். நானும் அப்படித்தான் நினைத்தேன்.

கலைஞரின் மகன் என்று சொல்லிக்கொள்வதை விட "தலைவர் கலைஞரின் தொண்டன்" என்று சொல்லிக் கொள்வதில்தான் மகிழ்ச்சியடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகம் எனும் 70 ஆண்டு வரலாற்றை நெஞ்சில் சுமந்து கொண்டு முற்றிலும் புதிய ஒரு எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும், தமிழினத்தையும் அழைத்துச் செல்ல நான் நினைக்கிறேன்.

பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பிய கோட்டை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். சுயமரியாதை எனும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சிதைக்கும் மத்திய அரசையும் பார்க்கும் போது நமக்கெல்லாம் வேதனை தந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நிலவும் அரசியல் சமூக சூழ்நிலைகள் சுய மரியாதை கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பெரும் சவாலாக நிலவுகின்றன. கல்வி, கலை, இலக்கியம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளெல்லாம் அதிகார பலத்தால் மத வெறியால் அழித்திட மத்திய அரசு முயன்று வருகிறது. நீதித்துறை, கல்வித்துறை மாநிலங்களில் கவர்னர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் அனைத்தும் மக்களாட்சியின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மாண்பை குலைக்கும் செயல்களாகவே அமைந்து கொண்டிருக்கின்றன.

Stalin pledges to work hard till his last breath

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் தொலை நோக்குப் பார்வையில் துவங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தங்கள் சுயநலம் ஒன்றிற்காகவே தாரை வார்த்து மாநில மக்களின் நலன்கள் அனைத்தையும் காவு கொடுத்து, சுயமரியாதையை முழுவதுமாக அடகு வைத்து, இன்னும் அண்ணா பெயரையும் தாங்கிக் கொண்டு தமிழக மக்களின் அனைத்து நலன்களையும் கூறு போட்டு பங்கிட்டு கொள்ளும் பகல் கொள்ளைகளில் அரசு என்ற பெயரால் நிலவிக் கொண்டிருப்பதை இதயத்தில் ரண வலியோடு கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்த சமூக தீமைகளை அகற்றி தமிழகத்தை திருடர்கள் கையிலிருந்து விடுவிப்பது நம்முடைய முதல் கடைமையாக இருந்திட வேண்டும்.

நம் நாட்டின் இன்றைய மாபெரும் ஆபத்தெனக் குறிப்பிட்டால் கொள்கைகளே அறியாத, இல்லாத பதவிகளையும் அவற்றின் அனுகூலங்களையும் மட்டுமே குறிவைத்து இயங்கும் அரசியல் கட்சிகள் தான்.

தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் பற்றி நினைக்கும் போது "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், அஞ்சி யஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே" என்கிற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தின் தலையைக் குனியச் செய்து லாபங்களை பொறுக்கிக் கொண்டு தன்மானம் இல்லாது இயங்கி வரும் அரசின் அவலங்களை நாம் அனைவரும் தினமும் ஏதாவது ஒரு வழியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெளியில் இருக்கும் போராட்டங்களுக்கு நாம் தயாராகும் முன் நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? இந்தக் கேள்விகள் என்னை சில நாட்கள் தூங்க விடவில்லை.

விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். ஒரு அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன்.

இந்த நாளில் அந்த கனவின் சில துகள்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் - நம் கழகம் - நம் தமிழினம் - நம் நாடு - நம் உலகம் இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது.

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளா விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான். "புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான்."

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மரபணுக்களோடும், நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் இதோ உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன். என்னோடு உடன் பிறந்திருக்கக்கூடிய கோடிக்கணக்கான உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! இது புதிய நாம்! அந்த அழகான எதிர்காலத்தில் யார் நம் கழகத்தினர்?

Stalin pledges to work hard till his last breath

தன் சாதியே உயர்ந்தது என்று நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரையும் தன் உடன் பிறப்பாக நினைப்போர். எளியோருக்கு கரம் கொடுப்போர்.

கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. தாம் நம்பவில்லை எனினும் பிறரின் நம்பிக்கையை மதிப்போர். யார் தவறு செய்தாலும் அது நான் என்றாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போர். அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கைகள் என்ன?

பகுத்தறிவு என்பது அறிவெனும் விழி கொண்டு உலகை காண்பது என்பதை உரக்கச் சொல்லுதல். ஆணுக்கு பெண் இங்கு சமம் என மதித்தல். திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சம உரிமை பெற்றுத்தருதல். தனி மனித மற்றும் ஊடகக் கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல், கருத்துச் சுதந்திரத்தை போற்றிப் பாதுகாத்தல். பிறமொழிகளை அழித்து இந்தியா முழுவதுக்கும் மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல். இவை எல்லாம் என் நீண்ட கனவின் சில துகள்கள். இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை. இதோ இந்த நொடியிலிருந்து மெய்ப்பட போகிறது.

இந்தக் கனவை முழுமையாக மெய்ப்பிக்க நான் துடித்துக் கொண்டிருக்கிறேன். அதை தனி மனிதனாக என்னால் செய்ய இயலாது என்பதையும் நான் அறிந்தே பேசிக் கொண்டிருக்கிறேன். என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே, நீயில்லாமல் என்னால் இந்த பெருங்கனவை மெய்ப்பிக்க முடியாது.

இது என் கனவு மட்டுமல்ல, நம் கனவு. நம் கழகத்தின் கனவு. ஏன், இந்த தமிழகத்தின் கனவு அது தான். வா! என்னோடு கை கோர்க்க வா!

ஒன்றாக முன்னேற மட்டுமல்ல, தேவைபட்டால் சில அடிகள் பின்னே வைக்க, இயற்கை பிற உயிர்களுக்காக சில அடிகள் பின்னே வைப்பது முன்னேற்றமே!

வா! இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா!

முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிய வா! இந்த அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம்!

நான் முன்னே செல்கிறேன். நீங்கள் பின்னே வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம் என்று அழைக்கிறேன். இந்தக் கூட்டத்தில் இருக்கும் மூத்தோர் அனைவரும் என் அண்ணன்கள், அக்காள்கள். இளையோர் அனைவரும் என் தம்பிகள், தங்கைகள். இனி இதுதான் நம்முடைய குடும்பம். இதுதான் என்னுடைய குடும்பம்.

தலைமைக் கழக நிர்வாகிகளோ, முன்னாள் அமைச்சர்களோ, மாவட்ட செயலாளர்களோ, மாவட்டக் கழக நிர்வாகிகளோ, வட்டக் கழக, நகரக் கழக, ஒன்றியக் கழக நிர்வாகிகளோ, ஏன், பதவிகள் இல்லாமல் மக்கள் பணியாற்றும் உறுப்பினர்களோ தலைமைக்கு அனைவரும் ஒன்றுதான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன். நானும் ஒரு தொண்டன் தான். இங்கு அனைவரும் சமம்.

யார் பெரியவர் என்ற போட்டியில் சுயநலத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதவர்களாக யாரும் ஆகி விடக்கூடாது. அதற்கு தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகத் தலைமை நிச்சயமாக இயங்கும்! இயங்கும்! இயங்கும்!

கழகத் தோழர்களே! இது காலத்தின் பேரழைப்பு. தலைமை ஏற்கும் கடமையும், கட்டாயமும் நம்மை அழைக்கிறது.

இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு! ஓடுவோம், ஓடுவோம் வாழ்க்கை நெறி முறைகளின் ஓரத்திற்கே ஓடுவோம்! நம் சொந்த நலன்களை மறந்து தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக உழைப்போம். உழைப்போம். வெற்றி அடையும் வரை உழைப்போம்.

உலகமே வியக்கும் சமூகநீதிக் கொள்கைகளின் தாய் வீடாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். தந்தை பெரியார் அவர்கள் நமக்கு கற்றுத்தந்த சுயமரியாதை, பெற்றுத் தந்த சமத்துவம் இவற்றிலிருந்து நாம் ஒரு நாளும் பின் வாங்கப் போவதில்லை.

நான் சிறுவனாக இருந்த போது பேரறிஞர் அண்ணாவின் குரலை மேடை அருகே ஒலி வாங்கி பிடித்து, பதிவு செய்து கொண்ட போது நான் மேடையேறிப் பேசுவேன் என்று கனவில் கூட எண்ணியதில்லை.

நான் இளைஞனாக இருந்த போது, நம் தலைவர் கட்சி நடத்தும் ஆற்றலை தூரத்தில் இருந்து பார்த்து வியந்து கொண்டிருந்த போது, என்றோ ஒரு நாள் இந்தக் கட்சியின் தலைமை ஏற்பேன் என்று ஒருநாளும் எண்ணியதில்லை.

அவர் இல்லாத எங்கள் கோபாலபுரம் வீட்டை, அவர் இல்லாத இந்த அறிவாலயத்தை, அவர் இல்லாத இந்த மேடையை கனவில் கூட நாம் கண்டதில்லை.

இத்தனை பெரிய பொறுப்பை, 50 ஆண்டு வரலாற்றை என் சிறிய இதயத்தில் ஏற்றி வைத்துவிட்டு, நம்முடைய தலைவர் ஓய்வெடுக்கச் சென்று விட்டார் என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

என்னுள் துடிக்கும் இதயம் அவர் தந்தது. அவர் அண்ணாவிடம் வாங்கிய இதயம் அது. எதையும் தாங்கும் இதயம் இதைத் தாங்காதா?

என் கடைசி மூச்சு உள்ளவரை, என் கடைசி இதயத் துடிப்பு இருக்கின்ற வரை, என் உயிரினும் மேலான தமிழினமே உனக்காக நான் உழைப்பேன். உனக்காக நான் போராடுவேன் என்ற உறுதிமொழியுடன் விடை பெறுகிறேன்.

அதேபோல், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கக்கூடிய, நம்முடைய பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள், பேசுகிற போது சொன்னார் கால்சட்டை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்திலே படித்துக் கொண்டிருந்த, ஒரு சின்னஞ்சிறுவனாக என்னை அவர் பார்த்தது, அந்த காட்சிகளையெல்லாம் அவர் விவரித்து சொன்னார்.

என்னை தூக்கி வளர்த்தவர்களில் அவரும் ஒருவர். உங்களையெல்லாம் நம்பித்தான் இங்கே இருக்கக்கூடிய அத்துனை பேரையும் நம்பித்தான், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வரமுடியாத நிலையில் இருக்கக்கூடிய இந்த இயக்கத்திலே அத்துனை தொண்டர்களுடைய உணர்வில் நம்பிக்கை வைத்துத்தான் இந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். இந்த தைரியத்தை, இந்த தெம்பை எனக்கு இப்படி வழங்கியிருப்பதற்கு, யார் காரணம் என்று சொன்னால், அதுவும் நம்முடைய தலைவர் கலைஞர் தான் - கலைஞர் தான்.

விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்!

English summary
DMK president MK Stalin has pledged that he will work hard till his last breath in his first address in the DMK general body meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X