''பாட்டியம்மா நல்லா இருக்கீங்களா.. நான் நம்ம ஊரு எம்.எல்.ஏ''.. அரசு பேருந்தில்.. அசந்துபோன பயணிகள்!
பெரம்பலூர்: பெரம்பலூர் எம்.எல்.ஏ. எம்.பிரபாகரன் அரசு நகர பேருந்தில் பயணம் செய்து பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற முதல் நாளிலேயே முத்தான 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் ஒன்றுதான் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்னும் செமையான திட்டம். இந்த திட்டம் பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்கள், விற்பனைக்காக பொருட்களை கொண்டு செல்லும் பெண்களுக்கு இந்த திட்டம் வரப்பிரதாசமாக அமைந்தது.

செலவு மிச்சமாகிறது
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பேருந்து கட்டணத்தை மிச்சப்படுத்தி குடும்ப செலவுக்கு பயன்படுத்த முடிவதாக பெண்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருநங்கைகளும் நகர பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும் மாற்றுத்திறனாளிகளும், அவர்களுடன் ஒரு உதவியாளரும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியது.

கட்டணமில்லா பயணச்சீட்டு
தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அவரது உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தனித்தனியாக கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பேருந்தில் பயணம் செய்த எம்.எல்.ஏ.
இந்த நகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பூலாம்பாடி நோக்கி அரசு நகர பேருந்து புறப்பட்டு சென்றது. பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் இந்த பேருந்தில் திடீரென ஏறினார். இதில் பயணம் செய்த ஒருவர் அங்கு இருந்த பெண்கள் உள்பட பயணிகளிடம் குறைகளை கேட்டார்.

நல்லா இருக்கீங்களா?
அங்கு இருந்த பாட்டி ஒருவரிடம் அக்கறையாக நலம் விசாரித்த எம்எல்ஏ எம்.பிரபாகரன் '' பாட்டியம்மா நல்லா இருக்கீங்களா.. நான்தான் நம்ம ஊரு எம்.எல்.ஏ. அரசு அறிவித்த நகர பேருந்தில் இலவச பயணம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறதா?'' என்று கேட்டார். தொடர்ந்து பயணிகளிடம் குறைகளை கேட்ட எம்எல்ஏ பிரபாகரன் கோனேரிப்பாளையம் வரை பயணம் செய்தார்.

வியந்து பார்த்த மக்கள்
பின்னர், வி.களத்தூர் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற நகரப் பேருந்தில் ஏறி ஆய்வு செய்து, பயணிகளிடம் குறைகளை கேட்டார். எம்.எல்.ஏ. என்றால் கால் தரையில் படாமல் ஆடி காரில் பறந்து செல்வார்கள். தேர்தலுக்கு முன்பாக மக்களின் குறைகளை கேட்பதோடு சரி, அதன்பிறகு தொகுதி பக்கம் எட்டி பார்பபதே கிடையாது என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் சாதாரணமாக மக்களோடு, மக்களாக பேருந்தில் பயணம் செய்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ எம்.பிரபாகரனின் செயலை மக்கள் மிகவும் வியந்து பார்த்தனர்.












Click it and Unblock the Notifications