தமிழக அரசியல் நிலையை பாருங்க.. ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி
Recommended Video

சென்னை: "திடீர் திடீருன்னு, உருளுதாம்..." என்ற சந்திரமுகி திரைப்படத்தில் வரும் பேய் அரண்மனையை போன்ற ஒரு சூழலுக்குள் சிக்கியிருப்பதாக உணர்கிறார்கள் தமிழக மக்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2016ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் துவங்கிய தமிழக அரசியல் மர்மம், இன்னும் விலகவில்லை. சொல்லப்போனால் அதிகரிக்கிறது.
ஜெயலலிதா மறைந்த சில நாட்களிலேயே அவசரமாக சசிகலா ஏன் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் என்பதில் தொடங்கியது அடுத்த மர்மம்.

சாது மிரண்டது
சாதுவாக இருந்த பன்னீர்செல்வம், நள்ளிரவு சமாதி தியானத்தில் உட்கார்ந்தது ஏன் என்பது அடுத்த மர்மம். கூவத்தூரில் தங்களை வைத்து பாதுகாத்த சசிகலா, தினகரன் தரப்பை புறக்கணித்துவிட்டு, தர்ம யுத்தம் நடத்துவதாக தொடை தட்டிய பன்னீர்செல்வம் அணியை எடப்பாடி ஏன் இணைத்தார் என்பது இன்னொரு மர்மம்.

மர்ம முடிச்சுகள்
சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால்தான் பன்னீர்செல்வம் கோபித்து பிரிந்தார் என்று தெரிந்தும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு எடப்பாடியிடமிருந்து முதல்வர் பதவியை பறிக்க தினகரன் ஏன் நினைத்தார் என்பது பெரும் மர்மம். ஆர்.கே.நகரில் அத்தனை படைபலத்தையும் மீறி டோக்கன் கொடுத்து சுயேச்சை எப்படி வென்றார் என்பது 2017ன் மிகப்பெரிய மர்மம்.

தினகரன் பல்டி
இரட்டை இலையை கைப்பற்றிவிடுவேன், 2 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று தேய்ந்து போன ரெக்கார்ட் போல சொல்லிவந்த தினகரன், திடீரென தனிக்கட்சி துவங்க உள்ளதாக அறிவித்தார்.பிறகு இல்லை என பல்டி அடித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலோடு தினகரன் மாயை ஒழிந்துவிடும் என எடப்பாடி தரப்பு நினைக்கிறது. இப்படி உள்கட்சிக்குள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என்றால் வெளியே இருந்து வரத்தொடங்கியுள்ளது ஆகப்பெரிய ட்விஸ்ட்.

ரஜினி கொடுத்த ட்விஸ்ட்
20 வருடமாக பாம்பு-கீரி சண்டை போல அரசியல் பேச்சுகளை சொல்லி வந்த ரஜினியை பார்த்து "பேசிகிட்டே இருக்காரே தவிர, கடைசிவர பாம்ப எடுத்து வெளிய விடமாட்டேங்கிறாரே" என்று ரசிகர்கள் புலம்ப, திடீரென நான் வந்துட்டேன்னு சொல்லு என அறிவித்தார் ரஜினி. அதிலும் ஆன்மீக அரசியல் என்று போகிற போக்கில் அவர் கொடுத்த ஒரு ட்விஸ்ட் அடேங்கப்பா.

இது பெரும் குழப்பம்
நான் மட்டும் கம்மியா என்கிறார் கமல். அடுத்த மாதம் முதல் பிரச்சாரம் செய்யப்போகிறாராம். இவர் காவியா, கருப்பா, அல்லது கருப்பிலும் காவி வண்ணம் இருக்கிறது என்று சொல்லும் குழப்பவாதியா என்பது, அவரது மேடை பேச்சை கேட்டு புரியாமல் தலை சொரிந்துகொண்டிருந்ததை போலவே தலை சொரிய வைக்கும் நடவடிக்கையாக இருக்குமா என்பது அடுத்த குழப்பம்.

புதிர்கள்
இதில் திடீர் அரசியல்வாதி தீபா, அவரிடம் கோபித்துக் கொண்டு கட்சி தொடங்கிய மாதவன், டிரைவர் ராஜாவை 'கட்சியைவிட்டு' தீபா நீக்கிய அதிரடி, போன்றோரையும் தமிழ் கூறும் நல்லுலகம் பார்க்க நேர்ந்தது சம கால வரலாற்றில் மிகப்பெரிய கொடுமை. அதிமுக ஓட்டு ரெண்டாக பிரிந்த பிறகும் டெபாசிட்டை இழந்த திமுக நிலையும், மக்களுக்கு புரியாத புதிர்தான்.

என்னதான் நடக்கிறது
இப்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் என்னதான் நடக்கிறது, என்னதான் நடக்கப்போகிறது என்பது புரியாமல், குழப்பத்தின் ஊடாக வழக்கம்போல அரசியல் பேசி கழிகிறது தமிழனின் தினசரி வாழ்க்கை. என்றுதான் இதற்கு விடுதலையோ?












Click it and Unblock the Notifications