பொறையார் பணிமனை விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.7.5 லட்சம் நிதி... அரசு அறிவிப்பு!
நாகை மாவட்டம் பொறையாரில் அரசு பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை : பொறையார் அரசு பணிமனை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவியை அரசு அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், பொறையார் கிராமத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனை இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில் பணியை முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் 3 நபர்கள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி பணிமனை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்.
கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு நிகழ்வாக தலா ஏழரை லட்சம் நிதிஉதவி அளிக்கப்படும். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications