காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி! ஸ்டிரைக் தொடருகிறது
சென்னை: டேங்கர் லாரி உரிமையாளர்களுடன், அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி சமையல் கியாஸ் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் காஸ் நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகளுக்கு) காஸ் எடுத்து செல்லும் பணியில், தென்மண்டல மொத்த சமையல் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் சேவை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கான வாடகை நிர்ணய ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைந்ததால், புதிய வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நடந்த 3 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால் கடந்த 30ம் தேதி நள்ளிரவு முதல் டேங்கர் லாரிகளை அதன் உரிமையாளர்கள் காஸ் நிரப்பும் நிலையங்கள் எதிரில் நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சமையல் காஸ் சிலிண் டர் விநியோகம் தடைபடாமல் இருப்பதற்காக சென்னை எழிலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உணவு வழங்கல் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன், எண்ணெய் நிறுவனங் கள் சார்பில் இந்தியன் ஆயில் நிறுவன வர்த்தக செயல் இயக்குனர் மன்னூர், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தென் மண்டல மொத்த சமையல் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நடராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இரவு வரை நடந்த கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. இதனால் 4வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
அடுத்த கட்டமாக இன்று, செவ்வாய்க்கிழமை நாமக்கல்லில் நடக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுவில் நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்பட உள்ளது. அதுவரை 3 ஆயிரத்து 200 லாரிகளும் இயக்காமல் வேலைநிறுத்தம் தொடரும் என்று நிர்வாகி ஒருவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
