தமிழகத்தின் சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி வெயில் அதிகமாக இருக்கும்:பீதியை கிளப்பும் வானிலை மையம்!
தமிழகத்தின் சில இடங்களில் இயல்பை விட வெயில் 2 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் சில இடங்களில் இயல்பை விட வெயில் 2 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.'
இதேபோல் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நெல்லை, நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறையாத வெயில்
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது வெப்பசலனம் காரணமாக மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோடைக்காலத்தை விடவும் தற்போது தான் வெயில் கொளுத்தி வருகிறது.

2 டிகிரி செல்சியஸ்
தமிழகத்தின் பல பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும். 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு
கேரள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுகுறைந்து காணப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மழை
ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு வேளைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
புதுச்சேரியில் மாலை, இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கவனமுடன் கடலில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications