மீண்டும் சரத்குமார்? தென்காசி தொகுதியில் பாஜக போடும் பெரிய பிளான்.. அப்போ அதிமுக?
தென்காசி: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை பெற பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை தென்காசி தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் நடிகர் சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவை எடுத்து கொண்டால் மொத்தம் 70 தொகுதிகளை குறிவைத்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. . குறிப்பாக கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், வேலூர், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 2ம் இடம் பிடித்தனர். மேலும் பல தொகுதிகளில் முன்பை விட கணிசமான அளவுக்கு அதிகமான வாக்குகளை பெற்றனர். இந்த தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பாஜக 70 சட்டசபை தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
தென்காசி நிலவரம்
அதில் உள்ள ஒரு சட்டசபை தொகுதி தான் தென்காசி. இந்த தொகுதியின் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தென்காசி தொகுதியை கேட்டு பெறுவதில் பாஜக உறுதியாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு தென்காசி சட்டசபை தொகுதியில் மட்டும் 40,000+ ஓட்டுகள் கிடைத்ததாக பாஜகவினர் கூறுகின்றனர்.
சரத்குமார் போட்டி?
இதனால் இந்த முறை தென்காசி தொகுதியில் வேட்பாளரை இறக்க பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சரத்குமார் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்து அந்த கட்சியில் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் தற்போது அதிமுகவிடம் தென்காசி தொகுதியை பாஜக கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை தென்காசி தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கிடைத்தால் நடிகர் சரத்குமார் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. சரத்குமார் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். தென்காசி சட்டசபை தொகுதியில் அதிகளவில் நாடார் மக்கள் உள்ளனர். நடிகர் என்பதால் எளிதில் மக்களை கவர வாய்ப்புள்ளது.
2011ல் வென்ற சரத்குமார்
அதுமட்டுமின்றி சரத்குமாருக்கு தென்காசி தொகுதி ஒன்றும் புதிது அல்ல. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனது சொந்த கட்சியாக இருந்த சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் சரத்குமார் மொத்தம் 92,253 ஓட்டுகள் வாங்கியிருந்தார்.
அவரை எதிர்த்து களமிறங்கிய திமுகவின் கருப்பசாமி பாண்டியன் 69,286 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார். இதனால் சரத்குமார் 22,967 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் சரத்குமார் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்டால் தென்காசி தொகுதியை இந்த முறை எளிதாக கைப்பற்றலாம் என்று ‛தாமரை’ கட்சி நினைக்கிறது.
சரத்குமார் என்ன சொன்னார்?
இதுதொடர்பாக சரத்குமாரும், சமீபத்தில் மனம் திறந்து இருந்தார். அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடந்த கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க சரத்குமார் வருகை தந்திருந்தார். அப்போது திடீரென்று தென்காசி வந்தது பற்றியும், தென்காசி தொகுதியில் போட்டியிட உள்ளீர்களா? என்பது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சரத்குமார், ‛‛தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். அதன்பிறகு மாநில தலைவர் ஆலோசிக்க வேண்டும். எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள் என்பது தெரிந்தபிறகு அதுதொடர்பான முடிவு எடுக்கப்படும். ஏற்கனவே நான் ஒன்றை சொல்லியிருக்கிறேன். நான் தேர்தலில் நிற்பதை விட என்னுடன் பயணித்தவர்கள் தேர்தலில் நின்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறேன்'' என்றார்.
அதன்பிறகு ஜனவரியில் தூத்துக்குடியில் அளித்த பேட்டியில் சட்டசபை தேர்தலில் நானும், ராதிகாவும் சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டேன். ஆனால் எனது ஆதரவாளர்கள் 5 பேருக்காவது தேர்தலில் சீட் வாங்கி கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் தற்போது சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறைந்த ஓட்டு வித்தியாசம்
ஏனென்றால் தென்காசி தொகுதியில் இப்போது சிட்டிங் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் உள்ளார். மீண்டும் அவர் திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட முயன்று வருகிறார். இது ஒருபுறம் இருக்க அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன் தென்காசி தொகுதியை மீண்டும் களமிறங்க தயாராகி வருகிறார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பழனி நாடார் 89,315 ஓட்டுகள் வாங்கிய நிலையில் செல்வமோகன் தாஸ் பாண்டியன் 88,945 ஓட்டுகள் பெற்று வெறும் 382 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார்.
அதற்கு முந்தைய 2016 தேர்தலில் அதிமுகவின் செல்வமோகன் தாஸ் பாண்டியன் 86,339 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 85,877 ஓட்டுகள் வாங்கி வெறும் 462 வாக்குகளில் தோல்வியை தழுவியிருந்தார்.
பழனி நாடார் - செல்வமோகன் தாஸ் பாண்டியன் இடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் கடந்த 2 தேர்தல்களில் வெற்றி - தோல்வி மாறி மாறி அமைந்துள்ளது. இதனால் இந்த முறை எப்படியாவது இங்கு வென்று விடலாம் என்று அதிமுக நம்புகிறது. இதனால் செல்வமோகன்தாஸ் பாண்டியன் அதிமுகவிடம் சீட் கோரி வருகிறார்.
செல்வமோகன் தாஸ்க்கு சிக்கல்
மேலும் தென்காசி தொகுதியை இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டாம். திமுகவே களமிறங்க வேண்டும் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். அதன்படி திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரும், கட்சியின் துணை அமைப்பு செயலாளருமான அன்பகம் கலை அல்லது அவரது மகன் கலை கதிரவன், மாவட்ட செயலாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் ஆகியோர் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவேளை திமுக களமிறங்கினால் அது அதிமுகவுக்கு இன்னும் டஃப் பைட்டாக மாறலாம்.
அதுமட்டுமின்றி அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியனின் அண்ணன், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி சில வாரங்களுக்கு முன்பு கைதானார். இது அவருக்கு நெகட்டிவாக மாற வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கையில் எடுத்து பிரசாரம் செய்யலாம். இது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதிமுக விட்டு கொடுக்குமா?
இதனால் தான் தென்காசி தொகுதியை பாஜக கைப்பற்ற காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும், இந்த தொகுதியை அதிமுக, பாஜகவுக்கு விட்டு கொடுக்குமா? இல்லாவிட்டால் வழக்கம்போல் அதிமுகவே களமிறங்குமா? என்பதையும் காத்திருந்து பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. ஒருவேளை தென்காசி பாஜகவுக்கு கிடைத்தால் அதில் சரத்குமார் போட்டியிடலாம்.
-
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு?












Click it and Unblock the Notifications