திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து.. 50+ கடைகள் எரிந்து நாசம்! போராடும் வீரர்கள்!
திருப்பூர்: திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காதர்பேட்டை பனியன் பஜாரில் வரிசையாக 50க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் உள்ளன. இந்நிலையில், இன்று இரவு ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தார். தற்போது வரை நான்கு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மின்கசிவு காரணமாக ஒரு கடையில் ஏற்பட்ட தீ , மளமளவென அனைத்து கடைகளுக்கும் பரவியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் ஆடைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது வியாபாரிகள் மற்று திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications