For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா புஷ்பா பதவி பறிப்பு பின்னணி... இதுவா? அதுவா? எது?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்த பெயர் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சசிகலா என்பார்கள். உடன்பிறவா சகோதரி சசிகலா நடராஜன் என்றால், குறுகிய காலத்தில் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்று பரபரவென்று கட்சியில் முன்னுக்கு வந்தவர் சசிகலா புஷ்பா. ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் சசிகலா ஓரம்கட்டப்பட்டார். ஆட்சி முடிவுக்கு வரப்போகும் நேரத்தில் சசிகலா புஷ்பாவின் தலையில் குட்டு வைத்து பதவியை பறித்துள்ளார் ஜெயலலிதா. அதிமுக மகளிரணி செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா புஷ்பா எம்.பியை திடீரென பதவியை நீக்கியதற்கான பரபரப்பான பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், முதலுார் அடுத்த அடையல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா புஷ்பா. இவரது கணவர் லிங்கேஸ்வர திலகன்.சசிகலா புஷ்பா, 2011 சட்டசபை தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின், அந்த தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டது.எனவே, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். அதற்கு பலனாக, உள்ளாட்சி தேர்தலில், துாத்துக்குடி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்று, மேயரானார். மேயராக இருந்தபோதே சர்ச்சைகள் ஏற்பட்டது.

மேயராக இருந்த போதே 2014ம் ஆண்டில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜ்யசபா எம்.பி.,யானதும், கட்சியின், ராஜ்ய சபா கொறடாவாகவும் நியமிக்கப்பட்டார். கட்சியின் மகளிர் அணி செயலர் பதவியும் உடனடியாக வழங்கப்பட்டது.

ஜெ அதிருப்தி

ஜெ அதிருப்தி

ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பெற்றதால் அடுத்தடுத்து வந்த பதவிகளால், கட்சியில் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். பொதுக்குழுவிற்கு முன், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சசிகலா புஷ்பா சிறப்பாக செயல்படவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதனால், அதிமுக தலைமைக்கு அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது.

பொதுக்குழு போட்டோ

பொதுக்குழு போட்டோ

இதற்கிடையில் கடந்த 31ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது பெண் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் ஜெயலலிதாவுக்கு வீரவாள் வழங்கினர். அதேபோல, மகளிர் அணி சார்பில் சசிகலா புஷ்பா மற்றும் நிர்வாகிகள் ஜெயலலிதாவுக்கு ஆளுயர மாலை அணிவித்தனர். அப்போது அமைச்சர் கோகுல இந்திராவும் உடன் இருந்தார். ஆனால், மறுநாள் சில பத்திரிகைகளில் வீரவாள் வழங்கிய அமைச்சர்கள் படம் ஓரங்கட்டப்பட்டதுடன், சசிகலா புஷ்பா மாலை அணிவிப்பது போல் புகைப்படங்கள் பெரிய அளவில் வெளியானது.

பெண் அமைச்சர்கள் புகைச்சல்

பெண் அமைச்சர்கள் புகைச்சல்

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அமைச்சர்கள் மூத்த அமைச்சர் ஒருவரிடம் முறையிட்டனர். இதையடுத்து அந்த மூத்த அமைச்சர் சில குறிப்பிட்ட பத்திரிகைகளில் சசிகலா புஷ்பாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து சசிகலா புஷ்பாவை மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதா விடுவித்துள்ளார்

பதவி பறிப்பின் பின்னணி

பதவி பறிப்பின் பின்னணி

ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர்கள் சட்டென்று இறங்கிவிட மாட்டார்கள். அதை தக்கவைத்துக்கொள்ள பல தகிடுதத்தங்களை செய்வார்கள். ஆனால் சசிகலாபுஷ்பா அப்படி அடிக்கடி செய்த சில வேளைகள்தான் இப்போது அவருக்கே ஆப்பாக அமைந்திருக்கிறது என்கின்றனர்.

மாவட்டத்தில் கட்சிக்காரர்களை கண்டுகொள்ளாமல், மாவட்டத்தின் பெரும் தொழிலதிபருடன் நட்பு பாராட்டினார் என்பது இவர் மீதான புகார்.

பதவியை பறித்த தாதுமணல்

பதவியை பறித்த தாதுமணல்

சமீப காலமாக, தாது மணல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் தென் மாவட்ட பிரமுகருக்கும், கட்சி தலைமைக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாது மணல் விற்பனையாளர் நடத்தும், 'டிவி' சேனலில், தி.மு.க.,விற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்த தாது மணல் பிரமுகருக்கு சசிகலா புஷ்பா நெருக்கமானவர் என்பதாலும், தி.மு.க., எம்.பி., ஒருவருடன் நட்பு பாராட்டியதாலும், சசிகலாவின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.

வேகம் பத்தாதுப்பா

வேகம் பத்தாதுப்பா

தேர்தல் நெருங்குவதால் மகளிரணியில் வேகமாக செயல்படுபவரை போடவேண்டும் என்பதாற்காகவே கோகுல இந்திராவை மகளிரணி செயலாளராக நியமித்துள்ளனர். சசிகலா புஷ்பாவின் கட்சிப் பொறுப்பில் மட்டுமே கை வைத்த ஜெயலலிதா, திருத்தப்பட்ட புதிய தலைமைச் செயற்குழு உறுப்பினர் பட்டியலில் இருந்தும் சைலண்டாக சசிகலா புஷ்பா பெயரை எடுத்து விட்டார். அதிமுகவினர் யாரும் அதிகமாக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் ஆர்டர் பறந்துள்ளதாம். விரைவில் எம்.பி., பதவியை ராஜினாமா செய்யச்சொன்னாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் தூத்துக்குடி வட்டாரங்களில். எது எப்படியோ அதிமுகவின் மியூசிக் சேர் ஆட்டம் சற்றே சுவாரஸ்யமானதுதான்!! தேர்தல் வருவதற்கு முன் இன்னும் யார்யார் தலை உருளப்போகிறதோ தெரியலையே?

English summary
There are many reasons behind the sacking of Sasikala Pushpa's sacking, sources in ADMK say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X