'கஞ்சா போதை ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது'.. நோட்டீஸ் ஒட்டிய வியாபாரி.. போலீஸ் ஷாக்
கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளுக்கு பயந்து 'ரவுடிகளால் கடை காலவரையின்றி மூடப்படுகிறது' என நோட்டீஸ் ஒட்டிவிட்டு வியாபாரி கடையை மூடிச்சென்றார்.
ராணிப்பேட்டை : கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளுக்கு பயந்து 'ரவுடிகளால் கடை காலவரையின்றி மூடப்படுகிறது' என நோட்டீஸ் ஒட்டிவிட்டு கடையை மூடிச்சென்ற வியாபாரி இன்று போலீஸ் கொடுத்த நம்பிக்கையின் காரணமாக கடையை திறந்துள்ளார். அந்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடந்திருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கீழ் பஜாரில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 38) என்பவர் கடை வைத்துள்ளார். முத்துராமலிங்கம் கடந்த 7 ஆண்டுகளாக சிமெண்டு மற்றும் கட்டுமானத்திற்கான இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 11-ந் தேதி கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துராமலிங்கம் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதனை அறிந்ததும் தகராறில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் உறவினர் ஒருவர் முத்துராமலிங்கத்தின் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டாராம். எனது உறவினர்தான். நாங்கள் இருவரும் சமாதானம் ஆகி விட்டோம். எங்கள் மீது புகார் கொடுக்க நீங்கள் யார்? என கேட்டு முத்துராமலிங்கத்தை மிரட்டி சென்றுள்ளார். இதனால் முத்துராமலிங்கம் புகாரை வாபஸ் பெற்றுவிட்டு வந்துவிட்டார்

வழக்கு பதியவில்லை
இதனிடையே கடந்த 12-ந் தேதி மீண்டும் அவரது கடை முன்பாக இரண்டு இளைஞர்கள் வந்து கற்களை வீசியும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் தராசு ஆகியவற்றை சேதப்படுத்தியும் முத்துராமலிங்கத்திடம் கடையை திறந்தால் ஒழித்து கட்டுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து முத்துராமலிங்கம் மீண்டும் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

கடை மூடல்
இதனால் விரக்தி அடைந்த முத்துராமலிங்கம் கடையின் ஷட்டரை மூடி பூட்டி விட்டு, "கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்பட்டது" என்ற நோட்டீசை கடையின் ஷட்டரில் ஒட்டி விட்டு தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். இந்த நோட்டீசை கண்ட அந்தப் பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முத்துராமலிங்கத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸ் உறுதி
இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கத்திற்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் ஆகவே மீண்டும் கடையை திறக்க கோரி அவரிடம் செல்போன் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற முத்துராமலிங்கம் இன்று காலை கடையைத் திறந்து வழக்கம் போல தன் பணியை மேற்கொண்டார். இது குறித்து முத்துராமலிங்கம் கூறுகையில், வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கை ஏற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கஞ்சா கும்பலை கைது செய்வது, பாதுகாப்பு அளிப்பதாக உறுதியின் பேரில் கடை திறந்ததாக கூறினார் .

கஞ்சா புழக்கம்
இதனிடையே அனைத்து வியாபாரி சங்க தலைவர் ஆரோக்கியசாமி கூறும் போது, தக்கோலத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. போலீசார் தனிக் கவனம் செலுத்தி இதை முற்றிலும் களைய வேண்டும் என்றார். தக்கோலம் போலீசார் இதுபற்றி கூறும் போது, தற்போது பழைய கஞ்சா குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்திருக்கிறோம். முத்துராமலிங்க கடையில் தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications