For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காசு கொடுத்து மோடி அலை வீசுவதாக பரப்பப்படுகிறது: ஜோதிமணி சிறப்பு பேட்டி

By Mayura Akilan
|

-ஜெயலட்சுமி

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அலை வீசுவதாக காசு கொடுத்து பரப்பப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ஜோதிமணி ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணியும் ஒருவர். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் மாணவப் பருவத்தில் இணைந்து இளைஞர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஜோதிமணி.

பத்தாண்டுகாலம் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி கிராமம் கிராமமாக சென்று களப்பணியாற்றிய அனுபவமும் உண்டு. பதினைந்து ஆண்டுகாலம் அரசியலில் இருந்தாலும் இளம் வயதிலேயே மூத்த தலைவர்களுக்கு உரிய முதிர்ச்சியுடன் பேசுகிறார்.

இதனாலேயே கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். தேர்தலில் தோற்றாலும். அந்த அனுபவம்தான் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராக உயர்த்தியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வியூகம் பற்றியும், துணைத்தலைவர் ராகுல் காந்தி பற்றியும், இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றியும் ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.

தனித்து போட்டியிடும் வலு.

தனித்து போட்டியிடும் வலு.

கேள்வி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை. அப்படியானால் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸுக்கு உண்மையிலேயே ஆதரவு இருக்கிறதா?

ஜோதிமணி: காங்கிரஸ் கட்சி பலமுறை தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியில் வீக் இல்லை. வலுவாகவே உள்ளது. தமிழகத்தில் இம் முறை நாடாளுமன்றத் தேர்தலை தனித்து சந்திப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

தமிழக மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர் பிரச்சினை

கேள்வி: தமிழக மீனவர் பிரச்சனை, ஈழத் தமிழர் பிரச்சனை என தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் தமிழகத்தில் முன் எப்போதையும்விட கடுமையான அதிருப்தி காங்கிரஸ் மீது இருக்கிறது. இதனாலேயே கூட்டணியில் இருந்தும் திமுகவும் விலகியது. ஏன் தமிழக உரிமை பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த காங்கிரஸ் முன்வருவதில்லை?

ஜோதிமணி: இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அங்குள்ள தமிழர்களுக்கு நன்மைதான் செய்துகொண்டிருக்கிறது. இந்திராகாந்தி காலகட்டத்தில் இலங்கையில் இருந்த போராளிகள் சொன்னதைக் கேட்டார்கள்.

விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள்

ஆனால் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் மீதான எண்ணம் இங்குள்ள தமிழர்களிடையே மாறிவிட்டது. இலங்கையில் உள்ள தமிழக போராட்டக்குழுவினரை ஒவ்வொருவராக அழிக்கத் தொடங்கினார் பிரபாகரன். அதுவும் ராஜபக்சேவிற்கு வசதியாகப் போய்விட்டது. கடைசி கட்டப் போரின் போது கூட மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஒரு சிலரின் உயிரையாவது காப்பாற்றலாம் என்று முடிவு செய்தது. ஆனால் புலிகள்தான் கேட்கவில்லை.

ராஜபக்சேவை ஜெயிக்க வைத்த பிரபாகரன்

ராஜபக்சேவை ஜெயிக்க வைத்த பிரபாகரன்

ராஜபக்சேவை பிரபாகரன்தான் விரும்பி ஜெயிக்க வைத்தார். தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததுதான் அவர் செய்த தவறு.

இலங்கைத் தமிழர்களின் விடுதலையை விட, அந்த மக்களின் சம உரிமையை விட, தங்களின் ஆதிக்கத்தை முன்னிறுத்தவே விடுதலைப் புலிகள் முக்கியத்துவம் கொடுத்தனர்.

மத்திய அரசு..

மத்திய அரசு..

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது குடியிருப்புகள், கல்விக்கூடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ரயில் பாதைகள் இந்திய அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன. ஈழப் பிரிவினை பேசுகிறவர்களால்தான் அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

பிரச்சினைகளை தீருங்களேன்

பிரச்சினைகளை தீருங்களேன்

இன்றைக்கு உள்ள மக்களைப் பற்றி யாராவது பேசுகிறார்களா? இங்கு அகதிகளாக உள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வைப் பற்றி தமிழ் உணர்வு அரசியல் தலைவர்கள் பேசுவதில்லையே. ஆனால் தேர்தல் சமயத்தில் ஈழம் பற்றியும், பொதுவாக்கெடுப்பு பற்றியும் பேசுகின்றனர்.

1998ல் இருந்து 2004வரை ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அங்கம் வகித்தவர்கள் அப்போதே ஈழப்பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டியதுதானே?

சாதனைகளை முன்வைக்கிறோம்

சாதனைகளை முன்வைக்கிறோம்

கேள்வி: தமிழகத்தில் இப்படி ஒரு "சென்டிமென்ட்" அரசியல் அல்லது மாநில நலன் சார்ந்த குமுறல் இருக்கும்போது, தகவல் அறியும் உரிமை சட்டம், லோக்சபால் மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா, நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற தேசிய அளவில் காங்கிரஸ் முன்வைக்கும் கோஷங்கள் இங்கு எடுபடுமா?

ஜோதிமணி: நிச்சயமாக! இன்றைக்கு கிராமங்களில் உள்ள மக்களுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஒரு வரமாக கிடைத்திருக்கிறது. சோனியாகாந்தியை அவர்கள் புகழ்கின்றனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினால் சாமான்யர்கள் கூட கேள்வி கேட்க முடிகிறது.

15லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டிருக்கிறது, விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 2004, 2009 தேர்தலைப் போல 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களுக்கு எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடித்தட்டு கிராம மக்களுக்கு காங்கிரஸ் அரசின் சாதனைகள் தெரிந்திருக்கிறது.

கோஷ்டிப்பூசல்

கோஷ்டிப்பூசல்

கேள்வி: தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைமை தொடங்கி அடிநிலை வரை எத்தனை கோஷ்டிகளாக இருக்க முடியுமோ அத்தனை கோஷ்டிகள் இருக்கின்றன என்பது உண்மை.. இந்த கோஷ்டி பூசல் இல்லாத தமிழக காங்கிரஸ் சாத்தியமா?

ஜோதிமணி : எந்த கட்சியில்தான் கோஷ்டி இல்லை, பூசல் இல்லை. அதிமுகவில் இல்லையா? தன்னுடைய போட்டோவைத் தவிர வேறு எந்த போட்டோவும் போடக்கூடாது என்று உத்தரவு போட்டவர் ஜெயலலிதா.

திமுகவில் உள்ள கோஷ்டி பூசல் அனைவருக்குமே தெரியுமே? பாரதீய ஜனதாவில் அத்வானி - நரேந்திர மோடி கோஷ்டி இருக்கின்றனரே? மற்ற கட்சியினரை ஊடகங்கள் விமர்சிப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஊடகங்களின் விமர்சனத்திற்கு மதிப்பளிக்கிறது.

பொய்யான கருத்துக்கணிப்பு

பொய்யான கருத்துக்கணிப்பு

கேள்வி: எந்த ஒரு கருத்து கணிப்பிலுமே நாட்டின் அடுத்த பிரதமராக ராகுலுக்கு ஆதரவே இல்லையே.. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜோதிமணி : கருத்துக் கணிப்பு என்பது ஒரு சிலரிடம் மட்டுமே கேட்டு போடப்படுகிறது. ராகுல்காந்திக்கு ஆதரவு இல்லை என்று ஊடகங்கள்தான் பரப்பிவிடுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் அடித்தட்டு மக்களிடத்தில் ராகுல்காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன்சிங் ஆகியோருக்கு ஆதரவு இருக்கிறது. நாங்கள் எடுத்த கருத்துக்கணிப்புகளில் மூவருக்குமே குறிப்பிட்ட சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது.

தனி மனித அரசியல்

தனி மனித அரசியல்

கேள்வி: ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கான வேட்பாளாராக அறிவிக்காதது ஏன்?

ஜோதிமணி : ராகுல்காந்தி தனி மனித அரசியலை விரும்பவில்லை. அமைப்பு சார்ந்த அரசியலைத்தான் விரும்புகிறார். அதுதான் வளர்ச்சிக்கு சாத்தியமாகும் என்கிறார். காங்கிரஸ் கட்சியில் யார் பிரதமர் என்றாலும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஒருபோதும் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. பாரதிய ஜனதாவில் மோடியை வேறு வழியின்றி பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கின்றனர்.

இன்றைக்கு ராகுல் காந்தியை விமர்சிப்பவர்கள் அவருடைய அமேதி தொகுதிக்கு சென்று பார்க்கட்டும். அங்கு பெண்களுக்கு அவர் செய்துள்ள நன்மைகளும், தொகுதியில் அவர் செய்துள்ள சாதனைகளும் அப்போதுதான் தெரியும்.

தேர்தல் வியூகம்

தேர்தல் வியூகம்

கேள்வி: தேர்தலில் தேசிய அளவிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் வகுத்திருக்கும் வியூகம் என்ன?

ஜோதிமணி : கடந்த பத்தாண்டுகளில் நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகளை சொல்லி வாக்கு கேட்கப் போகிறது காங்கிரஸ். தேசிய அளவில் கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்தும் தமிழகத்தில் சாதனைகளைச் சொல்லியும் வாக்காளர்களை சந்திக்க இருக்கிறோம்.

நிலம் கையக்கபடுத்தும் சட்டத்தினால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். பள்ளிகளில் நல்ல கட்டிடங்கள் கட்டப்பட்டதற்கு சர்வசிக்ஷா அபியான் திட்டம்தான் காரணம். தமிழக சாலைகளில் நல்ல பேருந்துகள் ஓடுவதற்கு மத்திய அரசின் திட்டம்தான் காரணம். தேசிய ஜனநாயகக் கூட்டணியோ பெருமுதலாளிகளின் அரசு. காங்கிரஸ் கூட்டணி அரசு ஏழைகளின் அரசு.

கரூர் மாவட்டத்தின் முன்னேற்றம்

கரூர் மாவட்டத்தின் முன்னேற்றம்

கேள்வி: நீங்கள் கரூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ன உறுதிமொழிகளை மக்களுக்கு கொடுப்பீர்கள்?

ஜோதிமணி: தலைமை விரும்பினால் நான் போட்டியிடுவேன். அமேதி தொகுதியைப் போல கரூர் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவேண்டும். அங்கு நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கவேண்டும். குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். தொழில்கள் அதிகம் உள்ள கரூர் மாவட்டத்தினை திருப்பூரைப் போல முன்னேற்ற வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மோடி அலை என்பது பொய்

மோடி அலை என்பது பொய்

கேள்வி: நாடு முழுவதும் நரேந்திர மோடி அலைவீசுகிறது என்பது பற்றி...

ஜோதிமணி : நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று கூறப்படுவது பொய்யானது. பல கோடி ரூபாய் செலவு செய்து வெளிநாட்டு நிறுவனம் அந்த அலையை கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ, மேற்கு வங்காளத்திலோ, வடகிழக்கு மாநிலங்களிலோ, ஏன் கடந்த முறை பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த கர்நாடகாவிலோ மோடி அலை வீசுகிறதா? இந்த மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன.

இந்த மாநிலங்களில் மோடி அலையினால் பாஜக எத்தனை தொகுதிகளை வெல்ல முடியும்? மோடி அலை வீசுகிறது என்று கூறுவது தவறான கருத்து. அலை என்பது நாடு முழுவதும் வீசவேண்டும். தானாக காசு கொடுத்து அலை வீசுவதாக பரப்பப்படுகிறது.

விஜயகாந்த் அறிவிப்பார்

விஜயகாந்த் அறிவிப்பார்

கேள்வி: தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் தெரிவித்தாலும் விஜயகாந்திடம் ஒரு குழப்பம் இருக்கிறது தெரிகிறது.. தேமுதிக- காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா?

ஜோதிமணி : தேர்தல் முடியும் வரை கூட்டணிக்காக அழைக்கும் கட்சிகள் அனைவரும் கதவைதிறந்து வைத்திருப்பார்கள். யாருடன் சேருவது என்று விஜயகாந்த் யோசித்து முடிவெடுப்பார். அது அவருக்கான உரிமை. நமக்கு அவசரம் என்பதற்காக விஜயகாந்த் உடனே முடிவை சொல்ல வேண்டியது இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கும் வரை நேரமிருக்கிறது. காங்கிரஸ் - தேமுதிக கூட்டணி அமையுமா என்பதை என்னளவில் கூற முடியாது.

இளைஞர்களுக்கு முன்னுரிமை

இளைஞர்களுக்கு முன்னுரிமை

கேள்வி: காங்கிரஸிலேயே அரை நூற்றாண்டு காலம், கால் நூற்றாண்டுகாலம் கோலோச்சும் சீனியர் தலைவர்கள் அனேகம் பேர் இருக்கும்போது இளைஞர்களுக்கு முன்னுரிமை என்ற ராகுலின் முழக்கம் எடுபடுமா?

ஜோதிமணி : கடந்த 2009 தேர்தலிலேயே இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பெண்களின் பங்கு அதிகம் இருக்கவேண்டும் என்று ராகுல்காந்தி எதிர்பார்க்கிறார். மூத்த தலைவர்களும் இன்றைக்கு இளைஞர்களுக்கு வழிவிட தயாராக இருக்கின்றனர். கட்சிப்பதவிலேயே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவதால் தன்னிச்சையாக 34 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிலும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்திற்குள் நுழையமுடிகிறது. அதன்மூலம் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப் படுகிறது.

பொய்யான சென்டிமென்ட்

பொய்யான சென்டிமென்ட்

கேள்வி : ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு வந்தாலே அங்கு தோல்விதான் என்ற சென்டிமெண்ட் நிலவுகிறதே?

ஜோதிமணி : (கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே பதில் சூடாக வருகிறது) இதுவும் ராகுல்காந்திக்கு எதிரான பரப்புரைதான். மோடி பிரச்சாரத்திற்கு போன இடங்கள் கூடத்தான் அக்கட்சி தோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்காக அவர்மீது இப்படி கூறுவதில்லையே? இது ஒரு சார்புத் தன்மை. ஒரு சில ஊடகங்களும் இதை செய்கின்றன.

கர்நாடகா, ஹிமாச்சல்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறதே? அதைப்பற்றி யாரும் பேசுவதில்லையே. வெற்றி என்றால் அதுவும் ராகுல்காந்தியைத் தானே சேரவேண்டும். அதைமட்டும் ஏன் மறைக்கின்றனர். கோபத்தோடு நம்மைப் பார்த்து கேட்டார் ஜோதிமணி.

English summary
There is no Narendra Modi wave. I can’t see a wave , This is just a PR exercise. Congress spokes person Jothimani Said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X